சென்னை: வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக சென்னையில் பிரபல ‘ஸீ ஷெல்’ தனியார் உணவகங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நடிகர் ஆர்யா சில ஆண்டுகளுக்கு முன்பு ‘ஸீ ஷெல்’ என்ற பெயரில் உணவகம் நடத்தினார். பின்னர் கேரள தொழிலதிபர் குல்ஹி மூசா என்பவருக்கு விற்பனை செய்துவிட்டார். இந்நிலையில், தொழிலதிபர் குல்ஹி மூசா தனது உணவகங்களில் வரும் வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதைதொடர்ந்து நேற்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் ‘ஸீ ஷெல்’ ரெஸ்டாரண்ட் உணவகங்கள் மற்றும் கேரள தொழிலதிபர் வசித்து வரும் சென்னை தரமணியில் உள்ள வீடு மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்தினர்.
வேளச்சேரி தாம்பரம் ெநடுஞ்சாலையில் உள்ள உணவகத்தில் 3 பெண் அதிகாரிகள் மற்றும் 3 ஆண் அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், விஜயநகர் மூன்றாவது குறுக்கு தெருவில் உள்ள உணவகத்தில் 2 ஆண் அதிகாரிகள் மற்றும் ஒரு பெண் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.மேலும், தரமணி, ஐடி ரேடியல் சாலையில் உள்ள உணவகம் மற்றும் உரிமையாளரான தொழிலதிபர் குல்ஹி மூசா வீட்டில் 14 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கடந்த 2023 முதல் 2025ம் ஆண்டு வரையிலான கணக்கு விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் என அனைத்தும் முழுமையாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணினிகள், லேப்டாப்புகள் உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் விற்பனை புத்தகங்களை கைப்பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை ‘ஸீ ஷெல்’ உணவகத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்த போது, நடிகர் ஆர்யா வீட்டிலும் சோதனை நடந்ததாக தகவல் வெளியாகியது. அதற்கு நடிகர் ஆர்யா மறுப்பு தெரிவித்துள்ளார். அதில், ‘சென்னையில் ஐடி ரெய்டு நடக்கும் ஓட்டலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த ஓட்டலின் உரிமையாளர் வேறு ஒருவர்’ என விளக்கம் அளித்துள்ளார். நடிகர் ஆர்யா தற்போது அண்ணா நகரில் குடும்பத்துடன் வசித்து வருவதாகவும், தேனாம்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் நடக்கும் சோதனைக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரியவந்துள்ளது.
The post வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக சென்னையில் பிரபல உணவகங்களில் வருமான வரித்துறை திடீர் சோதனை: வரி ஏய்ப்புக்கான முக்கிய ஆவணங்கள் சிக்கின appeared first on Dinakaran.
