×

எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட ஜூன் 25 அரசியலமைப்பு சட்டப்படுகொலை தினமா? ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு மம்தா கடும் எதிர்ப்பு

கொல்கத்தா: எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட ஜூன் 25ஆம் தேதியை அரசியலமைப்பு சட்டப்படுகொலை தினமாக அறிவித்த ஒன்றிய அரசுக்கு மம்தா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி நாடு முழுவதும் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி எமர்ஜென்சியை அமல்படுத்தினார். இந்த ஆண்டு வரும் ஜூன் 25ஆம் தேதி எமர்ஜென்சி தினம் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினத்தை அரசியலமைப்பு சட்டப்படுகொலை நாளாக அனுசரிக்க ஒன்றிய அரசு முடிவு எடுத்துள்ளது. இதை மேற்குவங்க முதல்வர் மம்தா கடுமையாக எதிர்த்துள்ளார்.

இதுபற்றி அவர் நேற்று கூறியதாவது: வரும் ஜூன் 25 ஆம் தேதியை அரசியலமைப்புச் சட்டப் படுகொலை நாள் என்று அனுசரிக்க பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு முடிவு எடுத்துள்ளது. இந்த முடிவு ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் கேலி செய்வதாகும். பாஜ தற்போது அரசியலமைப்பு மதிப்புகளை நிலைநிறுத்துவதாகக் கூறிக் கொண்டே, ஜனநாயக அமைப்புகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது. எனவே எனது அரசாங்கம் இந்த நாளைக் கடைப்பிடிக்காது. ஜூன் 25 ஆம் தேதியை அரசியலமைப்புச் சட்டப் படுகொலை தினமாக நாங்கள் கடைப்பிடிக்க மாட்டோம். இது பாசாங்குத்தனத்தைத் தவிர வேறில்லை. அரசியலமைப்பை மதிக்காதவர்கள் இப்போது அதன் ஒழுக்கத்தைப் பற்றிப் பிரசங்கிக்கிறார்கள். இது ஒரு கேலிக்கூத்து.

ஒவ்வொரு நாளும் கூட்டாட்சி கட்டமைப்பையும் ஜனநாயக நெறிமுறைகளையும் புல்டோசர் செய்பவர்களிடமிருந்து ஜனநாயகம் குறித்த சொற்பொழிவுகள் எங்களுக்குத் தேவையில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பெயரால் பொருளாதாரம் அழிக்கப்பட்ட விதம், நவம்பர் 8ஆம் தேதி தோறும் பொருளாதாரம் அழிக்கப்பட்ட நாளாகவும் அனுசரிக்கப்பட வேண்டும். ஏனெனில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டது. மக்கள் பல நாட்கள் வரிசையில் நின்றனர், பலர் இறந்தனர். அந்த நாள் ஏன் கருப்புப் பண தினமாகக் குறிக்கப்படவில்லை?.

அகமதாபாத் விமானவிபத்தில் இவ்வளவு பேர் விபத்துகளில் இறக்கின்றனர். ஆனால் ஒரு எப்ஐஆர் கூட பதிவு செய்யப்படவில்லை. இன்று இந்தியாவின் உண்மையான பிரதமர் யார்? மோடியா அல்லது அமித் ஷாவா? நாட்டை நடத்துவது மோடி அல்ல; அமித் ஷாதான். மோடி தொடர்ந்து பயணம் செய்கிறார். எனவே ஆட்சி அதிகாரம் எல்லாம் அமித்ஷாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரை அதிகாரப்பூர்வமாக பிரதமராக அறிவிக்க வேண்டும். அவர் ஏற்கனவே அரசாங்கத்தை பிரதிநிதியாக இருந்து நடத்தி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

* மோடிக்கு பதில் ஜனாதிபதி முடிவு எடுத்தால் ஓகே வா?
முதல்வர் மம்தா கூறுகையில்,’நமது கூட்டாட்சி உரிமைகளில் தலையிடுவதை நிறுத்துங்கள். மாநில அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆளுநர் ஒன்றிய அரசால் பரிந்துரைக்கப்பட்டவர். மோடி, அமித் ஷாவைத் தவிர்த்து ஜனாதிபதி அனைத்து முடிவுகளையும் எடுக்கத் தொடங்கினால் ஒன்றிய அரசு அதை ஏற்றுக்கொள்ளுமா?’ என்று கேள்வி எழுப்பினார்.

The post எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட ஜூன் 25 அரசியலமைப்பு சட்டப்படுகொலை தினமா? ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு மம்தா கடும் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Mamata ,Union government ,Kolkata ,Constitutional Assassination Day ,Indira Gandhi ,Dinakaran ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்