×

அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பேசியது என்ன? அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி விளக்க வேண்டும்: காங். வலியுறுத்தல்

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘‘கார்கில் போருக்கு பின் அமைக்கப்பட்ட மறுஆய்வுக்குழுவை போன்று பஹல்காம் மறுஆய்வு குழுவை அரசு அமைக்க வேண்டும். பிரதமர் மோடி தனது மூன்று நாடுகள் பயணத்தை முடித்து திரும்பியவுடன் அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும். இந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் தொலைபேசி உரையாடலின்போது பேசியது குறித்து அவர் விளக்கமளிக்க வேண்டும். நாட்டை நம்பிக்கையுடன் கொண்டு செல்ல வேண்டும். இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வர்த்தகத்தை ஒரு கருவியாக பயன்படுத்தியதாக டிரம்ப் கூறியதை பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் மறுக்க வேண்டும்.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பின்னணியாக அமைந்த எரிச்சலூட்டும், ஆத்திரமூட்டும் மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்களை கூறிய பாகிஸ்தான் ராணுவ தலைவர் ஜெனரல் அசிம் முனீர் அதிபர் டிரம்புடன் மதிய உணவு சாப்பிட இருக்கிறார். அரசாங்க தலைவராக இல்லாத ராணுவ வீரர் அதிபர் டிரம்புடன் சிறப்பு தனிப்பட்ட மதிய உணவுக்கு அழைக்கப்படுகிறார். இது இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவு. ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்த அதே பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு எப்படி ஒரு அற்புதமான கூட்டாளியாக மாறுகிறது? ஒரு குற்றவாளியை கூட்டாளி என்று அழைப்பது இந்தியாவின் ராஜதந்திரத்துக்கு மற்றொரு பின்னடைவாகும்” என்றார்.

* ஜீரணிக்க முடியவில்லை
பாஜ ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘காங்கிரசுக்கும் அதன் விமர்சன படைக்கும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்பிடம் தெள்ளத் தெளிவாக விளக்கியதை ஜீரணிக்க முடியவில்லை. இந்த விவகாரத்தில் காங்கிரசின் ஒவ்வொரு பொய்யும் முறியடிக்கப்பட்டு விட்டது. இனியும் அக்கட்சி நம்பிக்கை கொள்ளவில்லை என்றால் அது பாகிஸ்தானின் கூட்டாளியாக கருதப்பட வேண்டும்’’ என்றார்.

The post அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பேசியது என்ன? அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி விளக்க வேண்டும்: காங். வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : US ,President Trump ,PM Modi ,Congress ,New Delhi ,General Secretary ,Jairam Ramesh ,Pahalgam review committee ,Kargil war ,Modi ,US President Trump ,Dinakaran ,
× RELATED நிதித்துறை இணைஅமைச்சர் பதவி...