×

நகராட்சி, வணிகவரி, கைத்தறி உள்ளிட்ட 5 துறை அமைச்சர்கள், செயலர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: தலைமை செயலகத்தில் நடந்தது

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, தலைமை செயலகத்தில் நகராட்சி, வணிகவரி, கைத்தறி உள்ளிட்ட 5 துறை அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. சட்டப்பேரவையில் அறிவித்த திட்டங்களை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அனைத்து துறை அமைச்சர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி கடந்த 10ம் தேதி நெடுஞ்சாலை துறை, போக்குவரத்து துறை, எரிசக்தி துறை, உணவு மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர்கள், துறை செயலாளர்களுடன் தனித்தனியாக முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் நேற்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துறை சார்பான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடந்தது. கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், கைத்தறி, கைத்திறன் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் மற்றும் தலைமை செயலாளர் முருகானந்தம், நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன், துறை சார்பாக செயலாளர்கள் மங்கத்ராம் சர்மா, விஜயகுமார், கார்த்திகேயன், காகர்லா உஷா, அமுதவல்லி, பிரகாஷ் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டம், ஒவ்வொரு துறை சார்பில் தனித்தனியாக நடந்தது.இதில், தமிழக சட்டப்பேரவையில் கடந்த கூட்டங்களில் துறை சார்பாக நடந்த மானிய கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை, எந்தெந்த திட்டங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது, முடிந்த திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் துறை செயலாளர்களுடன் விவாதித்தார். தமிழகத்தில் 2026ம் ஆண்டு மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அறிவிக்கப்பட்ட பணிகளை விரைந்து முடித்து, முக்கிய திட்டங்களை மக்களின் செயல்பாட்டுக்கு விரைவில் கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார்.

The post நகராட்சி, வணிகவரி, கைத்தறி உள்ளிட்ட 5 துறை அமைச்சர்கள், செயலர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: தலைமை செயலகத்தில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Legislative Assembly ,
× RELATED மூணாறில் இரவில் வெப்பநிலை மைனஸ் 1...