×

மருதூர் மேலக்கால் வாய்க்காலில் தாமதமாக தொடங்கிய பாலம் சீரமைப்பு பணி

*கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் தவிப்பு

ஸ்ரீவைகுண்டம் : மருதூர் மேலக்கால் வாய்க்காலில் பாலம் சீரமைப்பு பணிகள் தாமதமாக துவங்கியதால் கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி பாசனத்தில் மருதூர் அணையில் கீழக்கால், மேலக்கால், ஸ்ரீவைகுண்டம் அணையில் வடகால், தென்கால் மற்றும் 53 பாசன குளங்கள் மூலமாக மொத்தம் 46,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இதில் வடகிழக்கு பருவமழை காலத்தில் அக்.15ம் தேதி முதல் மார்ச் மாதம் வரை பிசான சாகுபடியும், தென்மேற்கு பருவமழை காலத்தில் ஜூன் 15ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் வரை கார் சாகுபடியும், ஏப்ரல், மே மாதங்களில் முன் கார் சாகுபடி முறையும் வழக்கத்தில் இருந்து வந்தது.

சுமார் 23 ஆயிரம் ஏக்கரில் வாழை சாகுபடி, 17 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி, 6 ஆயிரம் ஏக்கரில் உளுந்து, வெற்றிலை உள்ளிட்ட இதர பயிர்களும் பயிரிடப்பட்டன.

இந்நிலையில் ஆறு, வாய்க்கால்கள், குளங்கள் உள்ளிட்ட நீராதாரங்கள் தூர்வாரப்படாத நிலையில் தண்ணீரை சேமிக்க முடியாமல் ஆண்டுதோறும் வீணாக கடலுக்கு தண்ணீர் செல்வது அதிகரித்து வருகிறது. இதனால் தற்போது ஒருபோக சாகுபடிக்கே தண்ணீர் கிடைக்காமல் கடைமடை விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்தாண்டிற்கான கார் சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து கடந்த 6ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 11 கால்வாய்களின் கீழ் வரும் 46,786 ஏக்கர் நிலங்கள் நேரடி மற்றும் மறைமுக பாசன வசதி பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மருதூர் மேலக்கால் வாய்காலில் கடந்த 2023ம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தால் சேதமடைந்த கரைகள் மற்றும் பாலம் சீரமைப்பு பணிகள் காலதாமதமாக துவங்கப்பட்டதால் பணிகள் முடிவடையாத நிலையில் மருதூர் மேலக்காலில் இருந்து கார் சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் நெல் சாகுபடி செய்ய முடியாமல் தரிசு நிலங்களாக காட்சியளிக்கின்றன.

அதிகாரிகள் அலட்சியம்

மருதூர் மேலக்கால் பாசன தென்கரை விவசாயிகள் சங்கத் தலைவர் ரஜினி கூறுகையில், கடந்த பிசான சாகுபடிக்கு அக்டோபர் முதல் வாரத்தில் அரசு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டது. தென்கரை பெரிய குளத்திற்கு நவம்பர் இறுதியில்தான் தண்ணீர் வந்தது.

அதனால் போதிய விளைச்சல் இல்லாமல் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது கார் சாகுபடிக்கு அக்டோபர் வரை விவசாயத்திற்கு தண்ணீர் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதிகாரிகளின் அலட்சியத்தால் கோடை காலத்தில் செய்ய வேண்டிய மருதூர் மேலக்கால் வாய்க்கால் சீரமைப்பு பணிகளை தற்போது துவங்கி உள்ளனர். தண்ணீர் தாமதமாக கிடைக்கும்போது ஐப்பசி மாதம் மழை வந்து எங்களுக்கு அதிகப்படியான நஷ்டம் ஏற்படும். விவசாயிகளை வஞ்சிக்கும் நோக்கிலேயே அதிகாரிகள் செயல்படுகின்றனர். தண்ணீர் விரைவாக வருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

The post மருதூர் மேலக்கால் வாய்க்காலில் தாமதமாக தொடங்கிய பாலம் சீரமைப்பு பணி appeared first on Dinakaran.

Tags : Marudhur Melakaal canal ,Thoothukudi district ,Marudhur dam ,Thamirabarani ,Dinakaran ,
× RELATED நடப்பாண்டில் சென்னையில் 22,180 வீடுகள்...