×

போதையில் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட திருமண மண்டப மேலாளர் நடுரோட்டில் குத்திக்கொலை: வாலிபர் கைது


முசிறி: திருச்சி மாவட்டம் முசிறி திருமுருகன் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(52). அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் மேலாளராக வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த முனியப்பன் மகன் கணேசன்(35). கூலித்தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர். இவர் அடிக்கடி குடித்துவிட்டு சாலையில் நின்று ரகளை செய்வது வழக்கம்.

நேற்று முன்தினம் மாலை கணேசன் குடிபோதையில் சுப்பிரமணியன் வேலை பார்க்கும் திருமண மண்டபம் அருகில் சாலையில் நின்று வருவோர், போவோரிடம் தகராறு செய்துள்ளார். இதை சுப்பிரமணியன் கண்டித்தார். முசிறி போலீசிலும் புகார் அளித்து விட்டு மண்டபத்துக்கு சென்று விட்டார். இதையடுத்து போலீசார் வந்து கணேசனை கண்டித்து எச்சரித்து அனுப்பினர். இதனால் கணேசன், சுப்பிரமணியன் மீது கோபத்தில் இருந்தார்.

இந்நிலையில் சுப்பிரமணியன் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து மண்டபத்திலிருந்து வீட்டுக்கு நண்பருடன் டூவீலரில் பின்னால் அமர்ந்து புறப்பட்டார். திருமுருகன் நகர் பஸ் நிறுத்தம் அருகே, கணேசன் டூவீலரை மறித்து தகராறு செய்தார். இதனால் கீழே இறங்கி வந்த சுப்பிரமணியனை கத்தியால் அவரது மார்பு, முதுகில் சரமாரி குத்தி விட்டு ஓடி விட்டார்.

தகவலறிந்து முசிறி போலீசார் வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த சுப்பிரமணியனை மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை சுப்பிரமணியன் இறந்தார். இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிந்து கணேசனை கைது செய்தனர். தகராறில் கணேசனுக்கும், கையில் கத்தி கீறியதில் லேசான காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

The post போதையில் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட திருமண மண்டப மேலாளர் நடுரோட்டில் குத்திக்கொலை: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Musiri ,Subramanian ,Musiri Thirumurugan Nagar ,Trichy district ,Ganesan ,
× RELATED மகளிர் உரிமைத் துறையின் சார்பில்...