×

ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்துக் கேட்பு தீவிரம்; நாடாளுமன்ற கூட்டுக் குழு பதவிக்காலம் நீடிப்பு?: குழுவின் தலைவரான பி.பி.சவுத்ரி தகவல்

புதுடெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்துக் கேட்பு தீவிரமாக நடைபெறும் நிலையில், நாடாளுமன்ற கூட்டுக் குழு பதவிக்காலம் நீடிக்கப்படலாம் என்று குழுவின் தலைவரான பி.பி.சவுத்ரி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்தும் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், அரசியலமைப்பு (129வது) திருத்த மசோதா – 2024 முன்மொழியப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, 2029ம் ஆண்டுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்படும் மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம், 2034ம் ஆண்டில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுடன் ஒத்திசைந்து முடிவடையும் வகையில் குறைக்கப்படும். உதாரணமாக, 2032ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்படும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகளாக மட்டுமே இருக்கும்.

மேற்கண்ட திட்டத்தின்படி வரும் 2034ம் ஆண்டுக்குள் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், மக்களவையோ அல்லது ஒரு மாநில சட்டப்பேரவையோ முன்கூட்டியே கலைக்கப்பட்டால், மீதமுள்ள காலத்திற்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும். நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால், அதனை ஒத்திவைக்குமாறு குடியரசுத் தலைவருக்கு நேரடியாகப் பரிந்துரைக்கும் அதிகாரம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு இந்த மசோதாவின் மூலம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2024 டிசம்பரில் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதா, தற்போது நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் விரிவான ஆய்வில் உள்ளது.

இக்குழுவின் தலைவரான பி.பி.சவுத்ரி, இந்த மசோதா குறித்து பொதுமக்களிடமிருந்தும், சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்தும் கருத்துக்களைப் பெறுவதற்காக தங்கள் குழு பல்வேறு மாநிலங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். இதுவரை மகாராஷ்டிரா, உத்தரகாண்ட் மாநிலங்களுக்குச் சென்றுள்ளதாகவும், மேலும் பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குச் செல்லவிருப்பதால், அறிக்கையை இறுதி செய்வதற்கு முன் குழுவின் பதவிக்காலத்தை நீட்டிக்கக் கோரப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

The post ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்துக் கேட்பு தீவிரம்; நாடாளுமன்ற கூட்டுக் குழு பதவிக்காலம் நீடிப்பு?: குழுவின் தலைவரான பி.பி.சவுத்ரி தகவல் appeared first on Dinakaran.

Tags : One Nation ,Committee Chairman ,P.P. Chowdhury ,New Delhi ,Joint Committee ,Parliament ,Parliamentary ,Dinakaran ,
× RELATED மோசடி வழக்கில் சிக்கியதால் பதவி...