×

இசைப்பள்ளி தேர்ச்சி சான்றிதழ், 10, 12ம் வகுப்பு தேர்ச்சிக்கு சமம்: பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு

சென்னை: இசைப்பள்ளி தேர்ச்சி சான்றிதழ் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழுக்கு சமமானது என பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை செயலர் சந்தரமோகன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ் (பகுதி-1) ஆங்கிலம் (பகுதி-2) ஆகிய பாடங்களை பயின்று வருகின்றனர். இசைப்பள்ளி மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்பை தடையின்றி பெரும் பொருட்டும், இடைநிற்றலை தவிர்க்கும் வகையிலும், இசை குறித்த பட்டறிவை ஊக்குவிக்கும் வகையிலும், வேலைவாய்ப்பை பெறும் நோக்கிலும் அவர்கள் அரசு தேர்வுகள் இயக்ககத்தால் நடத்தப்படும் 10ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்பாடங்களில் தேர்ச்சி பெறும் பட்சத்தில் 10ம் வகுப்பில் பகுதி-3ல் உள்ள முதன்மை பாடங்களான கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்குப் பதிலாக இசைப்பள்ளி பாடங்களில் முதன்மைப்பாடம் துணைப்பாடம் மற்றும் வாய்மொழித்தேர்வு, இசையியல் பாடங்கள் (தியரி எக்ஸாம்) ஆகியவற்றை சிறப்பு நிகழ்வாக பகுதி-3ன் முதன்மை பாடங்களாக கருதி அவர்களின் இசைப்பள்ளி தேர்ச்சி சான்றிதழை அரசு தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்படும் 10ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழுக்கு இணைத்தன்மை வாய்ந்தது என அரசு தேர்வுத்துறை சான்றிதழ் வழங்கலாம்.

அதேபோல், 10ம் வகுப்பை முறையாக பள்ளியில் பயின்றோ அல்லது தனித்தேர்வராக எழுதியோ அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் அல்லது தேசிய திறந்தநிலைப்பள்ளி நிறுவனம் (NIOS) வாயிலாக தேர்ச்சி பெற்ற பின்னர் நேரடியாக இசைப்பள்ளிகளில் 3 ஆண்டு படித்து இசைப்பள்ளி பாடங்களில் முதன்மை பாடம் (தாள்-1), முதன்மைப்பாடம் (தாள்-2), துணைப்பாடம் மற்றும் வாய்மொழித்தேர்வு, மேல்நிலை இசையியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று 12ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிப்பாடங்களில் தேர்ச்சி பெறும்பட்சத்தில் அவர்களின் இசைப்பள்ளி தேர்ச்சி சான்றிதழை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு (கலை மற்றும் தொழில் பிரிவுகளில் மட்டும்) தேர்ச்சிக்கு இணைத்தன்மை வாய்ந்தது என அரசு தேர்வுகள் இயக்ககம் சான்றிதழ் வழங்கலாம். மொழித்தேர்வுகள் தங்களுக்கு தேவையில்லை என கருதும் மாணவர்களுக்கு தொடர்புடைய பிரிவில் அரசு தேர்வுத்துறையால் வழங்கப்பட்டு வரும் மாவட்ட இசைப்பள்ளி தேர்ச்சி சான்றிதழை தொடர்ந்து வழங்கலாம். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

The post இசைப்பள்ளி தேர்ச்சி சான்றிதழ், 10, 12ம் வகுப்பு தேர்ச்சிக்கு சமம்: பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : School Education Department ,Chennai ,Chandaramohan ,
× RELATED தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக...