×

பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த மஞ்சப்பையை அனைவரும் பயன்படுத்த வேண்டும்

*கலெக்டர் பேச்சு

வாணியம்பாடி : உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நேற்று வாணியம்பாடியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் இஸ்லாமிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மஞ்சப்பை பயன்படுத்த வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அஜிதாபேகம், வட்டாட்சியர் உமாரம்யா, மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலக துணை மேலாளர் விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை பிங்கி ரோஹித் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் மாணவிகளிடம் கலெக்டர் சிவசவுந்திரவல்லி பேசியதாவது: பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்கு கொண்டு வருவது என்பது ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தின் முக்கிய நோக்கமாகும். பிளாஸ்டிக் நமது சுற்றுச்சூழலில் எவ்வளவு ஆபத்தாக உள்ளது, மாசுபாடுகளையும் விளைவிக்கக் கூடியதாக உள்ளது என்பதை அனைவரும் ஏற்கனவே அறிவீர்கள்.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை நாம் முற்றிலும் தவிர்க்க வேண்டும். மறுசுழற்சி செய்வதும், மாற்று சுற்றுச்சூழல் நட்பான பொருட்களை தேர்வு செய்வதும் மிகவும் முக்கியமானதாகும்.
நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட்டால் மட்டுமே இந்த பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்கு கொண்டு வர முடியும்.

மாணவிகளிடம் என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் உங்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரையும் பொருட்கள் வாங்க கடைகளுக்கு செல்கின்றபோது, பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை தவிர்க்க முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதற்கு மாற்றாக தான் மஞ்சப்பை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சமூக வலைத்தளங்களில் உங்களுடைய நண்பர்களுக்கும் பிளாஸ்டிக்கை தவிர்ப்பது குறித்து பதிவுகளை பகிர்ந்து, பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து, மீண்டும் மஞ்சப்பை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை உபயோகிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.

தொடர்ந்து, பாத்திரங்களை தூய்மை செய்வதற்கு நெகிழி நாருக்கு மாற்றாக தேங்காய் நார் கொண்டு பாத்திரத்தை தூய்மைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட மாணவி பூஜாஸ்ரீயின் முயற்சி பாராட்டக் கூடியது.

எனவே, நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் மற்றும் பணிபுரிகின்ற பணியாளர்கள் அனைவரும் இந்த தேங்காய் நாரை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் அனைவரும் உங்களுடைய இல்லங்களில் தேங்காய் நாரை கொண்டு பாத்திரங்களை தூய்மை செய்ய பயன்படுத்த வேண்டும் என்றார்.

தொடர்ந்து, வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி, பள்ளிக்கல்வித்துறை ஆகிய துறைகளின் சார்பில் 15 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் சிவசவுந்திரவல்லி தொடங்கி வைத்தார்.

இதில், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் பாலாஜி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த மஞ்சப்பையை அனைவரும் பயன்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Vaniyambadi ,World Environment Day ,Muslim Girls' Higher Secondary School ,Revenue ,Divisional Officer ,Ajitha Begum ,Taluka Officer… ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!