×

அதிமுக, இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல்

புதுடெல்லி: மாநிலங்களவைக்கு தமிழகத்தின் ஆறு எம்பி பதவிகளுக்கான தேர்தல் வரும் 19ம் தேதி நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவைச் சார்ந்த புகழேந்தி டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ஒரு நீதிமன்ற அவமதிப்பு மனுவை நேற்று தாக்கல் செய்துள்ளார். அதில்,‘‘அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகிய விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அது முடியாத நிலை இருந்து வரும் நிலையில் மாநிலங்களவை தேர்தல் வேட்பாளரை அங்கீகாரம் செய்து எடப்பாடி பழனிச்சாமி கொடுக்கும் கடிதத்தை ஏற்கக் கூடாது.

மேலும் இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் முடிவெடுக்க நீதிமன்றம், தேர்தல் ஆணையத்திற்கு கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதுவரை தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் அந்த விவகாரம் தொடர்பாக எடுக்கவில்லை. அதாவது கடந்த ஒன்பது மாதங்களாக தேர்தல் ஆணையத்தில் அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பான விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று பலமுறை மனு அளிக்கப்பட்டது. ஆனால் அதுதொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் மேற்கொள்ளவில்லை.

இதுபோன்ற செயல்பாடுகள் என்பது இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் முன்னதாக வழங்கிய உத்தரவுக்கு எதிரானது ஆகும். எனவே அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகிய விவகாரம் தொடர்பாக முன்னதாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த தவறிய, தலைமை தேர்தல் ஆணையத்தின் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கானது அடுத்த ஓரிரு நாட்களில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post அதிமுக, இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Delhi Eye Court ,New Delhi ,Tamil Nadu ,Chief Election Commission of India ,Delhi High Court of Justice ,Majestic Coordination Committee ,Dinakaran ,
× RELATED நிதித்துறை இணைஅமைச்சர் பதவி...