×

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு ஒரே நாளில் 3 தங்கம் உட்பட 6 பதக்கம்

குமி: 26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் தென்கொரியாவின் குமி நகரில் மே 27ம் தேதி துவங்கி நடந்து வருகின்றன. நேற்று 3வது நாள் போட்டிகள் மோசமான வானிலை காரணமாக தாமதமாக துவங்கின. ஆண்களுக்கான 3000 மீ தடை தாண்டும் போட்டியில் போட்டியில் இந்திய வீரர் அவினாஷ் சேபிள் தங்கம் வென்றார். ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் 3000 மீ தடை தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்ற 36 ஆண்டுகளில் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவினாஷ் சேபிள் பெற்றார்.

பெண்களுக்கான 100 மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான ஜோதி யர்ராஜி தங்கம் வென்று தனது பட்டத்தை தக்க வைத்து கொண்டார். மேலும் இவர் 12.96 வினாடிகளில் கடந்தது புதிய போட்டி சாதனையாக அமைந்தது. பெண்களுக்கான 4×400 மீ ரிலே போட்டியில் தமிழக வீராங்கனை சுபா வெங்கடேசன், ஜிஸ்னா மேத்யூ, ரூபல் சவுத்ரி, குஞ்சா ரஜிதா ஆகியோர் அடங்கிய இந்திய அணி 12 ஆண்டுகளுக்கு பின் தங்கம் வென்றது.

பெண்கள் நீளம் தாண்டுதல் போட்டியில் ஆன்சி வெள்ளி, ஷைலி வெண்கலம் வென்றனர். ஆண்களுக்கான 4×400 ரிலே இறுதி போட்டியில் தமிழக வீரர் விஷால் ஜெய்குமார், தர்மவீர் சவுத்ரி, மனு தெக்கினலில் சஜி ஆகியோர் கொண்ட இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றது. ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் சமர்தீப் சிங் கில் 6ம் இடத்தை பிடித்தும், உயரம் தாண்டுதலில் சர்வேஷ் குஷாரே 2.23 மீ கடக்க தவறியும் ஏமாற்றம் அளித்தனர். பெண்களுக்கான ஹெப்டத்லான் போட்டியில் இந்திய வீராங்கனை நந்தினி அக்சரா முதல் இடத்தில் நீடிக்கிறார். இதனால் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது. மீதமுள்ள போட்டிgளாக நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், 800 மீ ஓட்டம் நாளை நடைபெறும். பதக்க பட்டியலில் இந்தியா 5 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 14 பதக்கங்களுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது. சீனா, ஜப்பான் தலா 21 பதக்கங்களுடன் முதல், மூன்றாமிடம் வகிக்கின்றன.

The post ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு ஒரே நாளில் 3 தங்கம் உட்பட 6 பதக்கம் appeared first on Dinakaran.

Tags : Asian Athletics Championships ,India ,Gumi ,26th Asian Athletics Championships ,Gumi, South Korea ,Dinakaran ,
× RELATED சில்லிபாயிண்ட்..