×

கர்னல் சோபியா குறித்த சர்ச்சை பேச்சு; மபி பாஜ அமைச்சருக்கு எதிராக எஸ்ஐடி இடைக்கால அறிக்கை: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்

புதுடெல்லி: கர்னல் சோபியா குரேஷி குறித்த சர்ச்சையாக பேசிய பாஜக அமைச்சர் குன்வர் விஜய் ஷாவுக்கு எதிராக சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது. காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும், ஆப்ரேஷன் சிந்தூர் குறித்தும் இந்திய அரசு தரப்பில் நாட்டுமக்களுக்கு விளக்கமளித்தவர்களில் ஒருவர் கர்னல் சோபியா குரேஷி ஆவார். இந்நிலையில் மத்தியப்பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கர்னல் சோபியா குரேஷியை \\”பயங்கரவாதிகளின் சகோதரி\\” என்று அம்மாநில பாஜக அமைச்சர் குன்வர் விஜய் ஷா தெரிவித்திருந்த கருத்து மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த விவகாரத்தை மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து எப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிட்டது.

இதையடுத்து கர்னல் சோபியா குரேஷி விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர் மற்றும் தன் மீதான கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று அமைச்சர் குன்வர் விஜய் ஷா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மூன்று அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை கடந்த மே.19ம் தேதி அமைத்திருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் கோடைக்கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்தியப்பிரதேச அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,\\”கர்னல் சோபியா குரோஷி விவகாரத்தில் சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சர்ச்சை பேச்சு சம்பந்தமாக அமைச்சர் குன்வர் விஜய் ஷா மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,\\” விசாரணை தொடர்பான இடைக்கால அறிக்கையை சிறப்பு விசாரணை குழு தாக்கல் செய்துள்ளது. விசாரணை நடத்த அவர்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த வழக்கின் விசாரணையை கோடைக்கால விடுமுறைக்கு பின்னர் மீண்டும் பட்டியலிடப்படும். அப்போது இந்த இடைப்பட்ட காலத்தில் வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் நிலை அறிக்கையாக எஸ்ஐடி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஒத்திவைத்தனர்.

The post கர்னல் சோபியா குறித்த சர்ச்சை பேச்சு; மபி பாஜ அமைச்சருக்கு எதிராக எஸ்ஐடி இடைக்கால அறிக்கை: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Colonel Sophia ,SIT ,BJP ,Mafia ,Supreme Court ,New Delhi ,Special Investigation Team ,minister ,Kunwar Vijay Shah ,Colonel ,Sophia Qureshi ,Behala ,Kashmir… ,Sophia ,Dinakaran ,
× RELATED ஆண்டிபயாடிக் மாத்திரை அட்டையின்...