×

கோடை விடுமுறை இறுதி நாட்களில் சுற்றுலா தலங்களில் குவியும் மக்கள்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை பூங்காவில் நேற்று சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிவடைய உள்ள நிலையில் பல்வேறு சுற்றுலாத்தலங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

அந்த வகையில் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை பூங்கா பகுதியில் கோடை விடுமுறை நாளை முன்னிட்டு நேற்று சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. வைகை அணை பூங்காவிற்கு குடும்பத்துடன் சென்று வருவதற்கும், குழந்தைகள் குஷியாக விளையாடுவதற்கும் ஏற்ற இடமாக உள்ளது. பிரமாண்டமாக எழுந்து நிற்கும் அணையின் இரண்டு புறங்களும் வலது கரை பூங்கா, இடது கரை பூங்காக்கள் உள்ளது.

இந்த இரண்டு கரை பூங்காக்களிலும் ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள் உள்ளது. சிறுவர்கள் மகிழ்ந்து விளையாடுவதற்கு சிறுவர் பூங்கா, பெரியார் மாதிரி வைகை பூங்கா, மச்சக்கன்னி பூங்கா, பயில்வான் பார்க், யானை சறுக்கல், ஊஞ்சல், மலைகள் போல் அமைக்கப்பட்டு வரைபடங்கள், நீரூற்றுகள், புல்தரைகள், ஆங்காங்கே ஓய்விடங்கள், குழந்தைகள் குஷியாக சென்று வர உல்லாச ரயில், படகு குழாம், இசையுடன் தண்ணீர் நடனமாடும் வகையில் அமைக்கப்பட்டு இசை நடன நீரூற்று என ஏராளமான அம்சங்கள் செய்யப்பட்டுள்ளது.

பூங்காவில் தனியார் மூலம் ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் அதில் அதிக அளவு கூட்டம் காணப்பட்டது. மேலும் சிறுவர்களுக்காக இயக்கப்படும் உல்லாச ரயிலில் குடும்பத்துடன் பயணம் செய்து மகிழ்ந்தனர். பூங்காவில் புல்வெளிகளில் குடும்பம் குடும்பமாக அமர்ந்து மகிழ்ச்சியுடன் விளையாடினர். வைகை அணை பூங்காவில் ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளதால், காலை முதல் மாலை வரையில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டே இருந்தனர்.

The post கோடை விடுமுறை இறுதி நாட்களில் சுற்றுலா தலங்களில் குவியும் மக்கள் appeared first on Dinakaran.

Tags : Andipatti ,Vaigai Dam Park ,Tamil Nadu ,Andipatti… ,Dinakaran ,
× RELATED அவசரமாக குழந்தைகளுடன் பெட்டியில்...