×

கல்லணைக் கால்வாய் கோட்டத்தில் ரூ.9.25 கோடியில் வடிகால் பாசன கால்வாய் தூர்வாரும் பணி இறுதிகட்டத்தை எட்டியது

*சிறப்பு கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

தஞ்சாவூர் : கல்லணைக் கால்வாய் கோட்டத்தில் ரூ.9 கோடியே 25 லட்சம் நடைபெற்று வரும் வடிகால், பாசன கால்வாய் தூர்வாரும் பணி 98 சதவீதம் நிறைவுபெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு சிறப்பு கண்காணிப்பு அலுவலர் ஆறுமுகம் நேரில் ஆய்வு செய்தார்.

மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடிக்கு மேல் நீடித்து வருவதால், குறுவை சாகுபடிக்காக வழக்கம் போல் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதி வரை சென்று சேரும் வகையில், தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

அதன்படி இந்த ஆண்டு தூர்வாரும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள், வடிகால்கள் ஆகியவற்றில் 1,380 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.26.28 கோடி மதிப்பில் 291 இடங்களில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.கல்லணைக் கால்வாய் கோட்டம் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ் 114 பணிகளுக்கு ரூ.9 கோடியே 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது.

இந்த பணிகளின் மூலம் 467 கிலோ மீட்டர் நீள வடிகால் மற்றும் பாசன கால்வாய்கள் தூர்வாரப்படுகிறது. பாசனத்திற்கு விவசாயிகள் நிலங்களை தயார்படுத்தி வரும் நிலையில் தண்ணீர் தடையின்றி விவசாய நிலங்களை சென்றடையும் வகையில் தூர்வாரும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தூர்வாரும் பணி 98 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.

இந்த தூர்வாரும் பணிகளை சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்கும், விரைவாக முடிப்பதற்காகவும் தமிழ்நாடு அரசு சிறப்பு கண்காணிப்பு அலுவலராக கண்காணிப்பு பொறியாளர் ஆறுமுகம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கல்லணைக் கால்வாய் கோட்டத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர், பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும் என பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். கண்காணிப்பு பொறியாளர் ஆய்வின்போது, கல்லணைக் கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் வேல்முருகன், உதவி செயற்பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர்கள் சூரிய பிரகாஷ், மணிகண்டன், ரோசாரியோ நிஷாந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post கல்லணைக் கால்வாய் கோட்டத்தில் ரூ.9.25 கோடியில் வடிகால் பாசன கால்வாய் தூர்வாரும் பணி இறுதிகட்டத்தை எட்டியது appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Grave Canal Fort ,Special Monitoring Officer ,Government of Tamil Nadu ,Dinakaran ,
× RELATED அரசு ஊழியர்கள் மற்றும்...