×

பாமக தலைவர் பதவி மகனுக்கு, வன்னியர் சங்கம் பேரனுக்கு ராமதாஸ் டீலிங்கை ஏற்று அன்புமணி சமரசம்: சவுமியாவுக்கும் கட்சியில் முக்கிய பதவி

விழுப்புரம்: பாமகவில் கடந்த 5 மாதமாக நீடித்த குடும்ப மோதல் முடிவுக்கு வரவுள்ளதாக தெரிகிறது. பாமகவுக்கு அன்புமணி தலைவராகவும், வன்னியர் சங்கத்துக்கு பேரன் முகுந்தன் தலைவராகவும் செயல்படுவார்கள் என்ற நிறுவனர் ராமதாசின் டீலிங்கை அன்புமணி தரப்பு ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் ராமதாசின் மருமகள் சவுமியாவுக்கும் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் கசிந்து வருகின்றன. இவ்விவகாரம் தொடர்பாக தோட்டத்து வட்டாரம் கூறுகையில், கூட்டணி குடும்ப பிரச்னையால் எதிர்கால சூழலை கருத்தில் கொண்டுதான் பேரன் முகுந்தனை கட்சிக்குள் ராமதாஸ் நுழைத்தார்.

இது பிடிக்காமல் அன்புமணி எதிர்த்ததே இருவரின் மோதல் அதிகரிக்க காரணம். இதனால்தான், கட்சியில் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என்று ராமதாஸ் அனைத்து கூட்டங்களையும் கூட்டி தலைமை தாங்கி நடத்தி வருகிறார். இதனிடையே தர்மபுரியில் பேசிய அன்புமணி, ‘நான் என்ன தவறு செய்தேன், என்னை எதற்காக பதவியிலிருந்து நீக்கினார்கள். இதனால் ஒரு மாதமாக தூக்கம் இன்றி தவிக்கிறேன்’ என்று மேடையில் வெளிப்படையாக பேசியுள்ளார். இதையடுத்து முக்கிய முடிவுக்கு தைலாபுரம் தோட்டம் வந்துள்ளதாம். அதாவது அன்புமணிக்கே மீண்டும் தலைவர் பதவியை வழங்கவும் தனக்கு பலமாக இருக்கும் வன்னியர் சங்கத்துக்கு பேரன் முகுந்தனை தலைவராக்கி விடவும் ராமதாஸ் முடிவெடுத்து விட்டாராம்.

கட்சியை மகனும், வன்னியர் சங்கத்தை பேரனும் வழி நடத்த முடிவெடுத்து இத்தகவலை கவுரவ தலைவர் ஜி.கே.மணி மூலம் தூது அனுப்பப்பட்ட நிலையில், அதற்கு அன்புமணியும் ஓகே சொல்லி இருக்கிறாராம். இதுதொடர்பான முக்கிய அறிவிப்பை வருகிற 29ம்தேதி ராமதாஸ் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தோட்டத்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தலின்போது பாமகவின் வெற்றிக்கு பிரசாரம் செய்வதில் வன்னியர் சங்கத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் வன்னியர் சங்கம் மூலமாகத்தான் சொத்துக்கள் பாதுகாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் தற்போதைய தலைவர் பு.த.அருள்மொழியை நீக்கிவிட்டு முகுந்தனை நியமிப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இளைஞர் சங்கத்துக்கு அன்புமணியின் மனைவியும், ராமதாஸ் மருமகளுமான சவுமியாவை நியமிக்க முடிவெடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. குடும்ப மோதல் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளதால் தேர்தல் கூட்டணி வேலையை தந்தை, மகன் இருவரும் ஒருங்கிணைந்தே கவனிப்பார்கள் என்ற கருத்து பாமகவில் அடிபடுகிறதாம்.

 

The post பாமக தலைவர் பதவி மகனுக்கு, வன்னியர் சங்கம் பேரனுக்கு ராமதாஸ் டீலிங்கை ஏற்று அன்புமணி சமரசம்: சவுமியாவுக்கும் கட்சியில் முக்கிய பதவி appeared first on Dinakaran.

Tags : Bhamaka ,Vanniyar Sangam ,Ramdas ,Anbumani ,Saumiya ,Viluppuram ,Pamaka ,Anbumani Party ,Ramadasin ,Bamgaon ,Muhuntan ,Vanniyar Sangat ,Vannier Sangam ,Soumiya ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள்...