×

கடந்த 3 மாதங்களில் கேட்பாரற்று கிடந்த தங்கம், டிரோன், கடிகாரம் உள்பட ரூ.1.3 கோடி பொருட்கள் பறிமுதல்: சென்னை விமான நிலைய சுங்கத்துறை தகவல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் கடந்த 3 மாதங்களில் கேட்பாரற்றுக் கிடந்த உடைமைகளில் இருந்து ரூ.1.3 கோடி மதிப்புடைய தங்கம், தடை செய்யப்பட்ட சக்தி வாய்ந்த டிரோன்கள், விலை உயர்ந்த கைக்கடிகாரம், நட்சத்திர ஆமைகளை சுங்கத்துறை கைப்பற்றி உள்ளது. சென்னை விமான நிலைய சர்வதேச முனையத்தின் வருகை பகுதியில், கடந்த 3 மாதங்களில் கேட்பாரற்று கிடந்த உடைமைகளை சுங்கத்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது ஒரு உடைமைக்குள் சுமார் ரூ.80 லட்சம் மதிப்புடைய, 1.157 கிலோ தங்கக் கட்டிகள், மற்றொரு உடைமைக்குள் ரூ.13 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு விலை உயர்ந்த கைக்கடிகாரம் ஒன்று, மற்றொரு உடைமைக்குள் 427 நட்சத்திர ஆமைகள் இருந்தன. அந்த நட்சத்திர ஆமைகளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.10 லட்சம்.  மற்றொரு உடைமைக்குள் 16 டிரோன்கள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.26 லட்சம். இந்த டிரோன்கள் பாதுகாப்பு நலன் கருதி, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கடத்திக் கொண்டு வரப்படுவதற்கு இந்திய அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவைகள் அனைத்தையும் தனித்தனியே சுங்க அதிகாரிகள் கைப்பற்றி, இந்த பொருட்களை கடத்தி வந்த கடத்தல் ஆசாமிகள் குறித்தும், கடத்தல் பொருட்களை சென்னை விமான நிலையத்தில் போட்டுவிட்டு தலைமறைவான நபர்கள் குறித்தும் விசாரணைகள் தொடர்ந்து நடந்து வந்தது. அந்த விசாரணைகளில் டிரோன்கள், கைக்கடிகாரம் போன்றவைகள் கடத்தி வந்தவர்கள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து சுங்க அதிகாரிகள் இந்த நான்கு கடத்தல் சம்பவங்கள் குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு, சுங்க சட்ட விதிகளின்படி, கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.

அதன்படி, சுங்கத்துறையினர், இந்த கடத்தல் சம்பவங்கள் குறித்து விசாரணைக்கான நோட்டீஸ் வெளியிட்டுள்ளனர். அந்த நோட்டீஸ்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) சுங்கத்துறை அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளன. இதில் சம்பந்தப்பட்டவர்கள் வருகிற 30ம் தேதிக்குள், சென்னை மீனம்பாக்கம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு விசாரணைக்கு ஆஜராகாத நபர்கள் மீது சுங்க சட்ட விதிகளின்படி, மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதோடு, அவர்கள் தேடப்படும் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

 

The post கடந்த 3 மாதங்களில் கேட்பாரற்று கிடந்த தங்கம், டிரோன், கடிகாரம் உள்பட ரூ.1.3 கோடி பொருட்கள் பறிமுதல்: சென்னை விமான நிலைய சுங்கத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai Airport Customs ,Chennai ,Customs Department ,Chennai Airport ,Chennai Airport… ,Chennai Airport Customs Information ,Dinakaran ,
× RELATED அரசு ஊழியர்கள் மற்றும்...