×

சிவன் கோயில் தெப்பக்குளம் சீரமைப்பு பணி

 

மொடக்குறிச்சி, மே 23: மொடக்குறிச்சியில் சிவன் கோயில் தெப்பக்குளம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் உள்ள மேற்கு பார்த்த சிவன் கோயிலில் ஒன்றாக ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் மேற்கு பார்த்த பழமையான சிவன் கோயில் அமைந்துள்ளது. இந்த பழமை வாய்ந்த சிவன் கோயிலில் தினசரி சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இங்கு மொடக்குறிச்சி சுற்று வட்டார பகுதி மட்டுமின்றி ஈரோடு மாவட்டம் மற்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து இக்கோயிலுக்கு பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இக்கோயிலுக்கு எதிரே தெப்பக்குளம் உள்ளது. இந்த குளத்தில் பாசிகள் படர்ந்து மாசற்ற நிலையில் இருந்த இந்த குளத்தை ஆழப்படுத்தி, சுற்றுச்சுவர் அமைத்து சீரமைத்து கொடுக்க வேண்டும் என இக்கோயில் நிர்வாக கமிட்டியினர் மற்றும் மொடக்குறிச்சி பேரூராட்சியின் சார்பில் இந்து சமய அறநிலையத்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஈரோடு எம்பி பிரகாஷ் ஆகியோர் குளத்தை பார்வையிட்டு சென்றிருந்தனர்.

இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் இக்குளத்தை சீரமைத்து, ஆழப்படுத்தி, சுற்றுச்சுவர் அமைத்து, படித்துறை அமைப்பதற்கு ரூ.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்கும் பணிக்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டு குளத்தை ஆழப்படுத்தி சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நிறைவு பெற்று இன்னும் ஆறு மாத காலத்திற்குள் கோயில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என பேரூராட்சித் தலைவர் செல்வாம்பாள் சரவணன் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

The post சிவன் கோயில் தெப்பக்குளம் சீரமைப்பு பணி appeared first on Dinakaran.

Tags : Shiva ,Modakkurichi ,Shiva Temple Theppakulam ,Tamil Nadu ,Shiva Temple ,Modakkurichi, Erode district… ,
× RELATED பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது