- சிடோடு மாநில பொறியியல் கல்லூரி
- ஈரோடு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- துணை முதல்வர்
- உதயநிதி ஸ்டாலின்
- சித்தோடு அரசு பொறியியல் கல்லூரி
ஈரோடு, டிச.30: ஈரோடு அருகே உள்ள சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, ‘கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸ்’ வழங்குகிறார். தமிழ்நாடு விளையாட்டு துறையில் முதன்மை மாநிலமாக வர அரசு சார்பில் புதுப்புது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில், நகர பகுதிகள் மட்டும் அல்லாது கிராமப்புற பகுதிகளிலும் இருந்து விளையாட்டில் திறமையாளர்கள் வர வேண்டும் என்ற அடிப்படையில் ‘கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்’ மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக நகரப்பகுதிகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் ‘கலைஞர் ஸ்போர்ட் கிட்’ வழங்க அரசு முடிவு செய்தது.
அதன்படி, ஈரோடு உட்பட 15 மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ‘கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸ்’ வழங்கும் நிகழ்ச்சி சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் இன்று (30ம் தேதி) பகல் 12 மணியளவில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு துணை முதல்வரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பங்கேற்று வழங்க உள்ளார்.
இதில், ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சியில் 2 வார்டு, நகராட்சியில் 2 வார்டு, பேரூராட்சியில் 3 வார்டு என மொத்தம் 7 வார்டு பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு கிரிக்கெட் மட்டை, கைப்பந்து, கால்பந்து, பூப்பந்து, சிலம்பம் உட்பட 33 வகையான விளையாட்டு உபகரணங்களை துணை முதல்வர் வழங்குகிறார். தொடர்ந்து, 15 மாவட்டங்களில் கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் வழங்கும் நிகழ்ச்சியையும் காணொலி காட்சி வாயிலாக துணை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
இந்நிகழ்ச்சியில், தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, எம்பி.க்கள் அந்தியூர் செல்வராஜ், பிரகாஷ், எம்எல்ஏ.க்கள் சந்திரகுமார், வெங்கடாச்சலம், விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, கலெக்டர் கந்தசாமி, மேயர் நாகரத்தினம் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
