×

வக்பு என்ற பெயரில் இடுகாடுகளை கூட ஒன்றிய அரசு எடுத்துக்கொள்ளும்: உச்ச நீதிமன்றத்தில் வாதம்; தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

புதுடெல்லி: வக்பு திருத்த சட்ட மசோதா உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் அமர்வில் மூன்றாவது நாளாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் புதிய வக்பு சட்டத்துக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் ராகேஷ் திவேதி மற்றும் ரஞ்சித் குமார் ஆகியோர் ஆஜராகினர். அவர்கள் தங்கள் வாதத்தில், “பல பழங்குடி மக்களின் நிலங்கள் வக்பு பெயரில் அபகரிக்கப்பட்டுள்ளன. அதுதொடர்பான புகார்களும் உள்ளது. அவர்கள் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்று மக்களின் நிலங்களை அபகரிப்பது மிகவும் கொடூரமான ஒன்று. அது அரசியலமைப்புக்கு எதிரானது என மனுதாரர்களுக்கு தெரியவில்லையா? ஷரியா சட்டத்தை எடுத்து கொண்டோம் என்றால், ஒருவர் தனிநபர் சட்டத்தின் பயன்களை பெற வேண்டும் என்றால், அவர் ஒரு இஸ்லாமியர் என்பதை நிரூபிக்க வேண்டும். அதையேதான் வக்பு சட்ட திருத்தமும் கூறுகிறது. மேலும் வக்பு வாரியத்துக்கு இஸ்லாமியர் அல்லது இஸ்லாமியர் அல்லாதவர் தலைவராக நியமிக்கப்படுவது என்பது நிர்வாக ரீதியிலானது. எனவே புதிய வக்பு சட்டத்தை பொறுத்தவரை எந்த அரசியலமைப்பு மீறலும் கிடையாது. அதனால் சட்டத்தை நடைமுறைப்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடையை உச்ச நீதிமன்றம் நீக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.

இதையடுத்து மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, கோபால் சங்கர் நாராயணன் ஆகியோர் வைத்த பதில் வாதத்தில், “வக்பு என்பது இஸ்லாமின் ஒரு அத்தியாவசிய மத நடைமுறையா? இல்லையா? என்பதை தீர்மானித்த பின்பே இடைக்கால உத்தரவை நீக்குவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும். இதனால் வழக்கை உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியமைத்தாலும் பரவாயில்லை. குறிப்பாக வக்பு சொத்து தொடர்பாக ஒரு பிரச்னை எழும்போது முதலில் அந்த சொத்தின் பிரச்னைக்கு விடை காணும் வரையில், அது வக்பு சொத்தாக கருதப்படாது என்று அறிவிக்கப்படும்.
அதேசமயம் அந்த காலகட்டத்தில் அந்த சொத்து என்பது அரசு சொத்தாக கருதப்படும் என புதிய சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் எவ்வளவு கால அவகாசத்துக்குள் அந்த சொத்துமீது முடிவெடுக்க வேண்டும், அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற எந்த ஒரு கால நிர்ணயமும் கிடையாது. எந்த ஒரு நிலத்தையும் அரசு தன்னுடையது எனக்கூறி எடுத்துக்கொள்ளும் ஒரு நிலையை இந்த புதிய சட்டம் வழிவகை செய்துள்ளது. அதன்படி வக்பு 200 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வரும் இடுகாடுகளை கூட ஒன்றிய அரசு தனது நிலம் என்று கூறி எடுத்துக்கொள்ளும். அதற்கான சாத்தியக்கூறுகள் புதிய சட்டத்தில் உள்ளது. மேலும் எந்த மதத்துக்கும் விதிக்கப்படாத நிபந்தனை வக்பு திருத்த சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமை மீறல்” என வாதிட்டனர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “சொர்க்கம் இருக்கிறதா இல்லையா என்று தெரியாமல் அனைவரும் அங்கு செல்ல விரும்புகிறோம். குறிப்பாக வக்பு சொத்து மீது விசாரணை தொடங்கியதில் இருந்து, அதுசார்ந்த அறிக்கை சமர்பிக்கப்படும் வரையில் அந்த சொத்து வக்பு என்ற அந்தஸ்தை இழந்து விடும்தானே என்பதுதான் எங்களின் முக்கிய கேள்வியாக உள்ளது” என்று தெரிவித்த நீதிபதிகள், “வக்பு புதிய சட்ட திருத்தம் தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கும் விவகாரத்தில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து விட்டது” எனக்கூறி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

The post வக்பு என்ற பெயரில் இடுகாடுகளை கூட ஒன்றிய அரசு எடுத்துக்கொள்ளும்: உச்ச நீதிமன்றத்தில் வாதம்; தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Union government ,Waqf ,Supreme Court ,New Delhi ,Chief Justice ,P.R. Kawai ,Justice ,Augustine George Mayish ,Solicitor General ,Tushar Mehta ,Dinakaran ,
× RELATED நிதித்துறை இணைஅமைச்சர் பதவி...