×

நீர் பங்கீடு தொடர்பாக அரியானாவுடன் மோதல் நங்கல் அணைக்கு சிஐஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்பு: ஒன்றிய அரசுக்கு பஞ்சாப் முதல்வர் கடும் கண்டனம்

சண்டிகர்: நங்கல் அணையை பாதுகாக்க மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை அனுப்பும் ஒன்றிய அரசுக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கண்டனம் தெரிவித்துள்ளார். வடஇந்தியாவின் சட்லெஜ் ஆற்றில் அமைந்துள்ளது பக்ரா நங்கல் அணை. இந்த அணையில் இருந்து வரும் நீர் பஞ்சாப், அரியானா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் நீர்ப்பாசனம் மற்றும் குடிநீருக்காக விநியோகிக்கப்படுகிறது. தற்போது பஞ்சாபின் ரூப் நகர் மாவட்டத்தில் பக்ரா அணையின் கீழ்பகுதியில் உள்ள நங்கல் அணையில் பஞ்சாப் காவல்துறை பாதுகாப்பு அளித்து வருகிறது.

அரியானாவுக்கு கூடுதல் தண்ணீரை திறந்து விட பஞ்சாப் அரசு மறுத்து விட்டது. இதனால் இரு மாநிலங்களுக்கிடையே பதற்றம் நிலவுவதால் நங்கல் அணையின் பாதுகாப்பை பஞ்சாப் காவல்துறை பலப்படுத்தி உள்ளது. ஏற்கனவே பக்ரா அணையின் பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை ஒன்றிய அரசு நியமித்துள்ளது. இந்நிலையில் நங்கல் அணை பாதுகாப்பையும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 296 வீரர்கள் கொண்ட குழுவை ஒன்றிய அரசு அனுப்பி உள்ளது. நங்கல் அணை நீரை பகிர்ந்து கொள்வதில் பஞ்சாப் அரியானா மாநிலங்களுக்கிடையே ஏற்கனவே பிரச்னை நிலவும் சூழலில் ஒன்றிய அரசின் இந்த செயலுக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சங்ரூரில் செய்தியாளர்களிடம் பேசிய பகவந்த் மான் சிங், “சிஐஎஸ்எப் வீரர்களை நங்கல் அணை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த ஆண்டுக்கு ரூ8.58 கோடி செலவாகும் என்றும், இந்த பணத்தை பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் அல்லது பஞ்சாப் அரசு செலுத்தும் என ஒன்றிய அரசு சொல்கிறது. பஞ்சாப் காவல்துறை ஏற்கனவே நங்கல் அணைக்கு இலவசமாக பாதுகாப்பை அளித்து வரும் நிலையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை அனுப்ப வேண்டிய அவசியம் என்ன? பஞ்சாப் அரசு ஏன் பணம் தர வேண்டும்? பணம் கொடுக்க அனுமதிக்க மாட்டோம்” என உறுதிபட தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பகவந்த் மான், “பஞ்சாப் தண்ணீரை திருட முயற்சிக்கிறீர்களா? அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இந்த முடிவை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும். நங்கல் அணை பஞ்சாபின் அதிகார வரம்புக்குள் வருகிறது. பஞ்சாபின் சர்வதேச எல்லையை பாதுகாக்க முடிந்த பஞ்சாப் காவல்துறையால் அணையை பாதுகாக்க முடியாதா? இது தொடர்பாக பிரதமர் மோடியிடம் முறையிட உள்ளேன்” என கூறினார்.

The post நீர் பங்கீடு தொடர்பாக அரியானாவுடன் மோதல் நங்கல் அணைக்கு சிஐஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்பு: ஒன்றிய அரசுக்கு பஞ்சாப் முதல்வர் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : CISF ,Punjab ,Chief Minister ,Union government ,Chandigarh ,Bhagwant Mann ,Central Industrial Security Forces ,Nangal dam ,Bhakra Nangal dam ,Sutlej river ,North India ,Haryana ,Dinakaran ,
× RELATED நிதித்துறை இணைஅமைச்சர் பதவி...