×

தேயிலை தோட்ட அதிபர்கள் சங்கம் சார்பில் பேரணி, கண்காட்சி

குன்னூர், மே 22: நீலகிரி மாவட்டம் குன்னூர் உபாசி தென்னிந்திய தேயிலை தோட்ட அதிபர்கள் சங்கம் சார்பில் உலக தேயிலை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. முன்னதாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தேயிலை தோட்ட உரிமையாளர்கள் பேரணியாக உபாசி தேயிலை அலுவலகம் வந்தடைந்தனர். இப்பேரணியில் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த தேயிலை போட்ட உரிமையாளர்கள், உறுப்பினர்கள், ஊழியர்கள், இந்திய தேயிலை வாரிய அதிகாரிகள், உபாசி தேயிலை ஆராய்ச்சி அறக்கட்டளையின் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். பேரணியை உபாசி ஆலோசகர் அசாரியா பாபு துவக்கி வைத்தார். பின்னர் தென்னிந்தியாவில் உள்ள நீலகிரி, கர்நாடகா, வயநாடு, திருவாங்கூர், ஆனைமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து உற்பத்தியாகும் தேயிலையினால் தயாரிக்கப்பட்ட மற்றும் தேயிலை தூள்களின் வகைகள் காட்சிப்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு மாநிலத்திலும் உற்பத்தியாகும் தேயிலை தரம் மற்றும் அதன் தேநீர் சுவைகளை கண்டறிவது எப்படி? தேயிலை தூள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? போன்றவைகள் குறித்து சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அறிந்து கொள்ளும் வகையில் காட்சிபடுத்தப்பட்டு, அதுகுறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். ஒவ்வொரு மாநிலத்தில் விளையக்கூடிய தேயிலைகளின் தனித்துவம் மற்றும் அதன் பயன்பாட்டினால் விவசாயிகளுக்கு லாபம் ஈட்டக்கூடிய வகையில் நாம் அதை எவ்வாறு செயல்படுத்த வேண்டும்? தேயிலைத் தூளை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்?அதன் மூலம் எவ்வாறு நம் உடல் நலனையும் தேனீர் பருகி ஆரோக்கியமாக இருக்கலாம்? எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

தேநீர் வகைகள் காட்சிப்படுத்தப்பட்ட போது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு மாநிலங்களின் தேநீரை பருகி அதன் தரத்தை தெரிந்து கொண்டனர். 2019 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச தேநீர் தினம், தேயிலையின் வரலாற்று, கலாச்சார மற்றும் பொருளாதார முக்கியத்துவத்தை கௌரவிக்கும் வகையில் மே 21ம் தேதி உலகளவில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள், சிறந்த வாழ்க்கைக்கான தேநீர், குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் உள்ளவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் தேயிலை வகிக்கும் முக்கிய பங்கை வலியுறுத்துகிறது. சிறு விவசாயிகள் முதல் தோட்டத் தொழிலாளர்கள் வரை, தேயிலைத் தொழில் வேலைவாய்ப்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளது. இது தேயிலை வளரும் பகுதிகளில் நிலைத்தன்மை மற்றும் பொருளாதார மீள்தன்மையை ஊக்குவிக்கிறது என உபாசி தேயிலை ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

The post தேயிலை தோட்ட அதிபர்கள் சங்கம் சார்பில் பேரணி, கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Tea Estate Owners Association Rally, Exhibition ,Coonoor ,World Tea Day ,South Indian Tea Estate Owners Association ,Coonoor, Nilgiris district ,Coonoor Sims Park ,Upasi… ,Dinakaran ,
× RELATED சித்தூர் ஆரியம்பள்ளம் ஐயப்பன் கோயிலில் மண்டல விளக்கு திருவிழா