×

பொதுமக்கள் பாதுகாப்புக்காக டிரான்ஸ்பார்மரை சுற்றி நிறுவப்படும் மறைப்புகளில் பாரம்பரிய கட்டிட மாதிரி: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

மாதவரம்: சென்னை மாநகராட்சி சார்பில், பொதுமக்கள் பாதுகாப்புக்காக மின்மாற்றியை (டிரான்ஸ்பார்மர்) சுற்றி நிறுவப்படும் மறைப்புகளில் பாரம்பரிய கட்டிடங்களின் மாதிரிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை மாநகரப் பகுதியில் மின்வாரியம் சார்பில் ஏராளமான மின் மாற்றிகள் சாலையோரங்களில் நிறுவப்பட்டுள்ளன. குறிப்பாக வட சென்னையில் மின் மாற்றிகள் நிறுவப்பட்டுள்ள பகுதிகளில் பொதுமக்கள் குப்பையை கொட்டி வருகின்றனர். அங்கு கட்டுமானக் கழிவுகளும் கொட்டப்பட்டு வருகிறது.

மாநகராட்சி சார்பில் ஆங்காங்கே பொதுக்கழிப்பிடங்கள் கட்டப்பட்டு இருந்தாலும், வீட்டை விட்டு வெளியில் செல்வோரில் பலர் மின் மாற்றி அருகிலேயே சிறுநீர் கழிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் மின் மாற்றிகள் அமைக்கப்பட்ட பகுதிகள் குப்பைக் கழிவுகளுடன், துர்நாற்றம் வீசி, மாநகரின் அழகுக்கும், பொது சுகாதாரத்துக்கும் சவாலாக இருந்து வருகின்றன. அங்கு குப்பை கொட்டும்போதும், இயற்கை உபாதை கழிக்கும்போது, அவர்களை மின்சாரம் தாக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. இதை கருத்தில் கொண்டு வடசென்னை பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள மின்மாற்றிகளை சுற்றிலும் மாநகராட்சி சார்பில் கண்கவர் மறைப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது.

தற்போது சென்னை மாநகரில் உள்ள பாரம்பரிய கட்டிடங்களின் மாதிரிகளையும் அமைத்து வருகின்றனர். அதன்படி, தற்போது வட சென்னையில் திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர் மற்றும் அண்ணா நகர் ஆகிய 7 மண்டலங்களில் உள்ள 1220 மின் மாற்றிகளை சுற்றி ரூ.45 கோடியில் மறைப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதை மக்களை கவரும் பகுதியாக மாற்றும் விதமாக அந்த மறைப்புகளில் ரிப்பன் மாளிகை, விக்டோரியா பொது அரங்கம், புனித ஜார்ஜ் கோட்டை, எழும்பூர் அருங்காட்சியகம் உள்ளிட்டவைகளின் மாதிரிகள் அமைக்கப்படுகிறது. இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

The post பொதுமக்கள் பாதுகாப்புக்காக டிரான்ஸ்பார்மரை சுற்றி நிறுவப்படும் மறைப்புகளில் பாரம்பரிய கட்டிட மாதிரி: சென்னை மாநகராட்சி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation ,Madhavaram ,Chennai ,Electricity Board… ,Dinakaran ,
× RELATED அரசு ஊழியர்கள் கோரிக்கை தொடர்பாக...