×

மாநில அரசுகளுக்கு எதிராக ஆளுநர்களை மோடி அரசு தவறாக பயன்படுத்துகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி ஆதரவு

புதுடெல்லி: ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் குரல்களை நடுக்க, ஆளுநர்களை மோடி அரசு தவறாக பயன்படுத்துகிறது. இதை எதிர்க்க வேண்டும்’ என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், ஆளுநர் ரவிக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. மசோதாக்கள் மீது முடிவெடுப்பதில் ஆளுநருக்கு மட்டுமின்றி குடியரசு தலைவருக்கும் உச்ச நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அரசியலமைப்பு சட்டம் 143ன் கீழ் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்திடம் 14 கேள்விகளுடன் விளக்கம் கேட்டுள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாநில முதல்வர்களுக்கு எழுதிய கடிதத்தில், ‘‘இது ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை, ஒன்றிய அரசின் முகவர்களாக செயல்படும் ஆளுநர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து பலவீனப்படுத்தும் தீவிர முயற்சி தவிர வேறொன்றும் இல்லை. சட்டத்தின் மகத்துவத்தையும், அரசியலமைப்பின் இறுதி விளக்கவுரையாளராக உள்ள உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தையும் நேரடியாக சவால் செய்கிறது. எனவே கூட்டாட்சி தத்துவத்தையும், மாநில சுயாட்சி கொள்கையையும் காத்திடும் நோக்கம் கொண்ட, பாஜவை எதிர்க்கும் மாநில அரசுகள், மாநில கட்சி தலைவர்கள், அரசியலமைப்பை பாதுகாக்கும் இந்த சட்ட போராட்டத்தில் இணையுமாறு அழைப்பு விடுக்கிறேன்’’ என வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, நேற்று தனது எக்ஸ் பதிவில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் பதிவை பகிர்ந்து, ‘‘இந்தியாவின் பலம் அதன் பன்முகத்தன்மையில் உள்ளது. ஒவ்வொரு மாநிலமும் அதன் சொந்த குரல்களை கொண்டுள்ளன. அந்தக் குரல்களை நசுக்கவும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை தடுக்கவும் மோடி அரசு ஆளுநர்களை தவறாக பயன்படுத்துகிறது. இது கூட்டாட்சி மீதான ஆபத்தான தாக்குதல். இதை எதிர்க்க வேண்டும்’’ என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

The post மாநில அரசுகளுக்கு எதிராக ஆளுநர்களை மோடி அரசு தவறாக பயன்படுத்துகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி ஆதரவு appeared first on Dinakaran.

Tags : Modi government ,Rahul Gandhi ,Chief Minister ,M.K. Stalin ,New Delhi ,Former ,Congress ,president ,Tamil Nadu ,Tamil Nadu Legislative Assembly… ,
× RELATED 16 கி.மீ தூரம் கொண்ட புல்மேடு வனப்...