×

தொடர்ந்து தோற்கும் கட்சியை ஏன் விமர்சிக்க வேண்டும் அதிமுக, பாஜவுடன் கூட்டணி கிடையாது: தவெக ஆதவ் அர்ஜுனா பேட்டி

சென்னை: தொடர்ந்து தோற்கும் அதிமுகவை நாங்கள் ஏன் விமர்சிக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் (தேர்தல் மேலாண்மை) ஆதவ் அர்ஜுனா கூறினார். சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானத்தை வரவேற்றோம். ஆனால், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வக்பு சட்டத்திருத்தத்துக்கு எதிராக வழக்கு தொடரவில்லை.
வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான வழக்கு, அரசியலமைப்புச் சட்டத்துடன் சம்பந்தப்பட்டது. தனிமனிதர்கள் வழக்கு தொடுத்தால் அரசியல் லாபங்கள் இருக்குமோ என நீதித்துறை கருதக்கூடும். ஆனால், அரசு சார்பில் வழக்குத் தொடுக்கும் போது இன்னும் வலுவான வாதங்களை முன் வைக்க முடியும். வலுவாக போராட முடியும்.

திருமாவளவனை நாங்கள் தாக்கி பேசவில்லை. கட்சியின் தலைவர் விஜய்யுடன் பேசி, அவரின் வழிகாட்டுதலின்படி தான் நாங்கள் பேசுகிறோம். கொள்கை எதிரியான பாஜவுடன் கூட்டணி கிடையாது என முதல் மாநாட்டிலேயே அவர் தெளிவுபடுத்திவிட்டார். அதிமுகவை தவெக ஏன் எதிர்ப்பதில்லை என்று கேட்கிறார்கள். தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் ஒரு கட்சியை நாங்கள் ஏன் எதிர்க்க வேண்டும். அதிமுக பாஜவுடன் கூட்டணி அமைத்த அடுத்த நாளே அதற்கு எதிராக நாங்கள் அறிக்கை வெளியிட்டோம். விஜய்யின் மக்கள் சந்திப்பு வரும் டிசம்பர் மாதத்திற்குள் பெரிய அலையாக மாறும். கோவையில் திட்டமிட்டு ரோடு ஷோ நடத்தவில்லை. விஜய் இங்கு செல்கிறார், அங்கு செல்கிறார் என்ற தகவலை உளவுத்துறை தான் லீக் செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post தொடர்ந்து தோற்கும் கட்சியை ஏன் விமர்சிக்க வேண்டும் அதிமுக, பாஜவுடன் கூட்டணி கிடையாது: தவெக ஆதவ் அர்ஜுனா பேட்டி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BJP ,Adhav Arjuna ,Chennai ,Tamil Nadu Victory Party ,General ,Tamil Nadu government ,Thaveka ,Dinakaran ,
× RELATED ஓட்டலில் இளம்பெண் கொலை; நடிகை...