×

தமிழகம் முழுவதும் சாலை ஓரங்களில் உள்ள கிணறுகள் – பள்ளங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்ய வேண்டும்: கலெக்டர்களுக்கு தலைமைச்செயலர் உத்தரவு

சென்னை: சாத்தான்குளம் ஆம்னி வேன் விபத்து எதிரொலியாக தமிழகம் முழுவதும் சாலைகளின் ஓரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் தலைமைச்செயலர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் சாலை பாதுகாப்பிற்கான ஏற்பாடுகள் நெடுஞ்சாலைத்துறை மூலமாக பல்வேறு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட 5 பேர் தண்ணீரில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுபோன்ற விபத்துகளைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள சாலை ஓரத்தில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்களை ஆய்வு செய்து கணக்கெடுக்க வேண்டும் என்றும், சாலையின் ஓரத்தில் உள்ள பள்ளங்களை இருந்தால் அது தொடர்பான வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் பலகைகள் வைக்க வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ‘‘இந்த பகுதிகளில் பள்ளம் உள்ளது அல்லது கிணறு உள்ளது ‘‘ போன்ற அறிவிப்பு பலகை கட்டாயம் வைக்க வேண்டும் என்றும், ஆய்வு செய்யப்படும் கிணறுகளை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்க முடியும் என்றால் அந்த நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும், நிரந்தரமாக கிணறுகளை மூடும் வகையில் அவற்றை சுற்றி சுற்றுச்சுவர் அமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தலைமைச்செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த ஆய்வினை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் இணைந்து, கிணறு மற்று பள்ளங்கள் உள்ள இடங்களை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்மொழிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post தமிழகம் முழுவதும் சாலை ஓரங்களில் உள்ள கிணறுகள் – பள்ளங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்ய வேண்டும்: கலெக்டர்களுக்கு தலைமைச்செயலர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Secretary ,Chennai ,Sathankulam omni van accident ,Muruganandam ,Dinakaran ,
× RELATED இலங்கை சிறையில் இருந்து விடுதலை...