×

முதல் நாளில் 844 பேர் ஜெட்டா சென்றனர் தமிழ்நாட்டில் இருந்து இந்த ஆண்டு 5,730 பேர் ஹஜ் புனித பயணம்: அமைச்சர் நாசர் வழியனுப்பினார்

சென்னை: முஸ்லிம்களின் புனித பயணமான ஹஜ் யாத்திரை செல்பவர்கள் சென்னை விமான நிலையத்தில் இருந்து சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் தனி விமானங்களில் ஜெட்டா நகருக்கு புறப்பட்டு செல்கின்றனர். இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து 5,730 பேர் ஹஜ் யாத்திரை செல்கின்றனர். முதல் விமானம் நேற்று மாலை 5.55 மணிக்கு சென்னையில் இருந்து ஜெட்டா நகருக்கு புறப்பட்டது. இதில் 402 பேர் செல்கின்றனர். அவர்களில் ஆண்கள் 200 பேர், பெண்கள் 202 பேர். இந்த 402 பேரில் 400 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இரண்டு பேர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

ஹஜ் யாத்திரியர்கள் செல்லும் இரண்டாவது தனி விமானம், 442 பேருடன் நேற்று இரவு 7.55 மணிக்கு சென்னையில் இருந்து ஜெட்டாவுக்கு புறப்பட்டு சென்றது. நேற்று ஒரே நாளில் 2 தனி விமானங்களில் 844 பேர் ஜெட்டாவுக்கு புறப்பட்டு சென்றனர். இதை தொடர்ந்து வருகிற 30ம் தேதி வரையில், மொத்தம் 14 தனி விமானங்களில் 5,730 பேர் ஹஜ் யாத்திரைக்கு சென்னையில் இருந்து செல்கின்றனர். அதில் சென்னையில் இருந்து சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் தனி விமானங்கள் மூலம் 5,407 பேர் செல்கின்றனர். தமிழகத்தை சேர்ந்த மேலும் 323 பேர், வெளிமாநிலங்களில் இருந்து ஹஜ் புனித யாத்திரைக்கு ெஜட்டா நகருக்கு புறப்பட்டு செல்கின்றனர்.

முதல் நாள் இரண்டு விமானங்களில் ஹஜ் யாத்திரை செல்லும் யாத்திரிகர்களை, தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர், சென்னை விமான நிலையத்தில் வரவேற்று வழியனுப்பி வைத்தார். பின்பு அமைச்சர் நாசர், அளித்த பேட்டி: இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு, மானியமாக கொடுப்பதற்கு ரூ.14 கோடியே 21 லட்சத்து 75 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. சிறுபான்மை மக்கள் மீது உள்ள அக்கறை காரணமாக, ஒருவருக்கு ரூ.25,000 வரை மானியமாக கொடுத்து வருகிறோம். இந்த பயணம் மேற்கொள்ளக்கூடிய தகுதியான நபர்கள் அனைவருக்கும், நிச்சயமாக மானியம் வழங்கப்படும். இந்த ஆண்டு விண்ணப்பித்த அனைவருக்கும் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் அளிக்கப்பட்டு, அனைவரும் மானியம் பெற இருக்கின்றனர். அதோடு இந்த பயணத்தை அரசும் கண்காணித்து வருகிறது. இவ்வாறு அமைச்சர் நாசர் கூறினார்.

The post முதல் நாளில் 844 பேர் ஜெட்டா சென்றனர் தமிழ்நாட்டில் இருந்து இந்த ஆண்டு 5,730 பேர் ஹஜ் புனித பயணம்: அமைச்சர் நாசர் வழியனுப்பினார் appeared first on Dinakaran.

Tags : Jeddah ,Tamil Nadu ,Haj pilgrimage ,Minister ,Nasser ,Chennai ,Saudi Arabian Airlines ,Chennai airport ,
× RELATED தமிழக அரசின் மீது சுமை கூடுவதை...