×

கால்நடைகளை நோய்களில் இருந்து காத்திட அனைத்து தடுப்பூசி பணிகளையும் தங்கு தடையின்றி செயல்படுத்த வேண்டும்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் இயக்குநர் அலுவலக மாநாட்டுக் கூட்ட அரங்கத்தில், கால்நடை பராமரிப்புத் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. ஆய்வின் போது அமைச்சர் பேசுகையில், கிராமப்புற கால்நடை விவசாயிகளுக்கு சிறந்த முறையில் கால்நடை மருத்துவம் மேற்கொள்ளும் நோக்கத்தோடு, துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு உட்கட்டமைப்பு பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும், மேலும், கால்நடைகளை நோய்களில் இருந்து காத்திட மேற்கொள்ளப்படும் அனைத்து தடுப்பூசிப் பணிகளையும் தங்கு தடையின்றி செயல்படுத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

பசுந்தீவனம் ஆண்டு முழுவதும் கிடைக்கும் நோக்கில், பசுந்தீவன உற்பத்தியை அதிகரித்திட செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, கிராமப்புற நிலமற்ற விவசாயிகளின் கால்நடைகளுக்கு பசுந்தீவனம் ஆண்டு முழுவதும் கிடைத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் கால்நடை பண்ணைகளின் செயல்பாடுகள் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கால்நடை மருத்துவ சேவைகள் கிடைக்காத தொலைதூர கிராமப்புற பகுதிகளில் கால்நடை மருத்துவ சேவைகளை வழங்கும் பொருட்டு செயல்படுத்தப்பட்டு வரும் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், அனைத்து ஊர்திகளும் ஆண்டு முழுவதும் சேவைகள் வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இக் கூட்டத்தில் துறை செயலாளர் சுப்பையன், இயக்குநர் கண்ணன் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கால்நடைகளை நோய்களில் இருந்து காத்திட அனைத்து தடுப்பூசி பணிகளையும் தங்கு தடையின்றி செயல்படுத்த வேண்டும்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Minister ,Anitha Radhakrishnan ,Chennai ,Tamil Nadu Government Animal Husbandry and Medical Services Director's Office ,
× RELATED பழைய ஓய்வூதிய விவகாரம் தொடர்பாக...