×

விதை நேர்த்தி செய்தால் உரச்செலவு குறையும்

பழநி, மே 16: உரச்செலவை குறைக்க விதை நேர்த்தி செய்வது அவசியம் என வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது:
பயிர்களை விதை மூலம் பரவக்கூடிய பூஞ்சான் நோய்களிலிருந்து பாதுகாப்பதற்கு விதையுடன் பூஞ்சான மருந்து கலந்து விதை நேர்த்தி செய்திட வேண்டும். விதை மூலம் பரவும் இலைப்புள்ளி, இலைக்கருகல், இலை உறை அழுகல், குலை நோய் போன்ற பூஞ்சான நோய்களை தடுக்க 1 கிலோ விதைக்கு 2 கிராம் வீதம் ‘கார்பன்டைசிம்’ கலந்து 24 மணிநேரம் வைத்திருந்து பின் விதைக்க வேண்டும். இல்லாவிட்டால் 1 கிலோ விதைக்கு 4 கிராம் வீதம் ‘டிரைக்கோ டெர்மாவிருடி’ அல்லது 1 கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் ‘சூடோமோனாஸ் ப்ளாரசன்ஸ்’ என்ற உயிரியல் பூஞ்சான மருந்தை விதைப்பதற்கு முன் கலந்து விதைக்க வேண்டும். 1 ஏக்கர் விதைக்க தேவையான விதைக்கு விதை நேர்த்தி செய்ய ரூ.10 ரமுதல் ரூ.20 வரை செலவாகும்.

ஆனால், விதை நேர்த்தி செய்வதால் பயிர் வளர்ச்சி காலத்தில் நோய்கள் தாக்கி, அவற்றை கட்டுப்படுத்த மருந்திற்கு செலவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது. நெல், சிறுதானியங்கள், பருத்தி, கரும்பு, எள், சூரியகாந்தி பயிர்களுக்கு விதைநேர்த்தி செய்வதற்கு 1 ஏக்கர் விதைக்கு அசோஸ்பைரில்லம் 1 பாக்கெட் ஆறிய வடிகஞ்சியில் கலந்து அதனுடன் பூஞ்சான விதை நேர்த்தி செய்த விதையை கலந்து நிழலில் 30 நிமிடம் உலர்த்தி பின்பு விதைக்க வேண்டும்.நிலக்கடலை மற்றும் பயிறு வகைகளுக்கு விதை நேர்த்தி செய்வதற்கு 1 ஏக்கர் விதைக்கு ‘ரைசோபியம்கல்ச்சர்’ 1 பாக்கெட்டை ஆறிய வடிகஞ்சியில் கலந்து அதனுடன் பூஞ்சான விதை நேர்த்தி செய்த விதையைக் கலந்து நிழலில் 30 நிமிடம் உலர்த்தி பின் விதைக்க வேண்டும். உயிர் உர விதை நேர்த்தி செய்வதால், உயிர் உரங்கள் காற்றிலுள்ள தழைச்சத்தை கிரகித்து பயிருக்கு கொடுக்கும்.

அதனால் இளம்பயிரின் இலைகள் கரும்பச்சை நிறத்துடன் செழிப்பாக வளரும். பயிர்கள் கூடுதல் மகசூல் கொடுக்கும். இதனால் கால் பங்கு தழைச்சத்து இடுவதை குறைக்கலாம். அதன்மூலம் உரச்செலவை குறைக்கலாம். எனவே விவசாயிகள் பூசனக்கொல்லி விதை நேர்த்தி செய்து பயிர்களை நோய்களிலிருந்து வருமுன் காக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

The post விதை நேர்த்தி செய்தால் உரச்செலவு குறையும் appeared first on Dinakaran.

Tags : Palani ,Dinakaran ,
× RELATED உரிமையாளர், 8 ஆடுகள் வாகனம் மோதி சாவு