×

ரூ.27 கோடி மதிப்பில் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டம்: திருப்பாச்சூர் சுகாதார மையத்தில் நடந்த விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

திருவள்ளூர், மே13: பூண்டி ஒன்றியத்தில் துணை சுகாதார நல வாழ்வு மையத்தில் ரூ.27 கோடி மதிப்பில் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் முதலமைச்சரால் விரைவில் தொடங்கி வைக்கப்படும் என்றும் அவர் கூறினார். திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், திருப்பாச்சூர், துணை சுகாதார நல வாழ்வு மையத்தில் ரூ.27 கோடி மதிப்பில் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டம், அனைத்து மாவட்டங்களிலும் விரிவாக்கத் திட்டத் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் மு.பிரதாப், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சசிகாந்த் செந்தில், எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, துரை சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சுகாதார அலுவலர் (திருவள்ளூர்) பா.பிரியாராஜ் வரவேற்றார்.

விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டத்தினை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 2022ல் ஈரோட்டில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றபோது ஈரோடு பகுதியில் இன்றைக்கு புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது, புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருகிற இந்த ஈரோடு மாவட்டத்திற்கு ஒட்டுமொத்த மக்களையும் பரிசோதனை செய்து இவர்களை தொடக்க நிலையிலேயே புற்றுநோயை கண்டறிந்து அவர்களுக்கு உதவும் பட்சத்தில் ஈரோடு மாவட்டத்தில் உயிர்கள் பாதுகாக்கப்படும் என்று அறிவித்தார்.

புற்றுநோயை பொருத்தவரை ஆரம்ப நிலைகளிலேயே கண்டறிந்தால் அவர்களை காப்பாற்றிட முடியும் என்பது இன்றைக்கு அறிவியல் பூர்வமான உண்மை. தமிழ்நாடு முழுவதும் உரியநேரத்தில் பரிசோதனை செய்தால் பல்வேறு உயிர்களை காப்பாற்றிட முடியும் என்கின்ற வகையில் கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இதற்காக ரூ.27 கோடி ஒதுக்கி தமிழ்நாட்டில் இருக்கின்ற 38 வருவாய் மாவட்டங்களிலும், இந்த பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டார். ஆண்களை பொறுத்தவரை புற்றுநோய் என்பது வாய் புற்றுநோய், புகையிலை போன்ற பல்வேறு நச்சுகள் உபயோகப்படுத்துகிற காரணத்தினால் ஆண்களுக்கு வாய் புற்றுநோயும், பெண்களை பொறுத்தவரை கருப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய் என்று பல்வேறு வகைகளில் புற்றுநோய் பாதிப்புகள் ஏற்பட்டு கண்டறிவது என்கின்ற வகையில் 38 மாவட்டங்களுக்கும் இந்த திட்டம் கொண்டு வரப்படும்.

இதில் முதல் படியாக காஞ்சிபுரம், திருவாரூர், தர்மபுரி, கரூர், திருச்சி, வேலூர், தேனி, மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு புற்றுநோய் பரிசோதனை திட்டத்தை தொடங்கி வைத்துள்ளோம். 12 மாவட்டங்களில் 713 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 97 அரசு மருத்துவமனைகள், 12 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உட்பட 822 மையங்களில் புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காஞ்சிபுரத்தில் அண்ணா மருத்துவமனையில் ரூ.372 கோடி செலவில் மருத்துவமனை கட்டுகிற பணி மருத்துவ கட்டமைப்புகளை கொண்டு அதிநவீன உபகரணங்களை அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ரூ.372 கோடியில் ரூ.120 கோடி இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு முதல்வர் அறிவித்துள்ளார். அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் முதலமைச்சரால் விரைவில் தொடங்கி வைக்கப்படும்.

அதேநேரத்தில் 14 வயதை தொடுகிற இளம் மகளிருக்கு, இளம் பெண் குழந்தைகளுக்கு புற்றுநோய் தடுப்புத் திட்டம் ஒன்று எச்பிவி என்கிற ஒரு தடுப்புத்திட்டம், புற்றுநோய் பாதிப்பு வராமல் தடுப்பதற்கு எச்பிவி என்கிற தடுப்பூசி ரூ.36 கோடி செலவில் முதல்வர் அறிவித்திருக்கிறார். தனியார் மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ரூ.4 ஆயிரம் வரை செலவாகும். அந்த தடுப்பூசியை தமிழ்நாடு அரசு இலவசமாய் செயல்படுத்தவிருக்கிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண்தம்புராஜ், ஆவடி மாநகராட்சி ஆணையர் ச.கந்தசாமி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வ விநாயகம், கூடுதல் இயக்குநர் கிருஷ்ணராஜ், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், இணை இயக்குநர் அம்பிகா சண்முகம், வட்டாட்சியர் ந.ரஜினிகாந்த், காங்கிரஸ் நாடாளுமன்ற பொறுப்பாளர் ஏ.ஜி.சிதம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட சுகாதார அலுவலர் (பூந்தமல்லி) பிரபாகர் நன்றி கூறினார்.

The post ரூ.27 கோடி மதிப்பில் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டம்: திருப்பாச்சூர் சுகாதார மையத்தில் நடந்த விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Ma. Subramanian ,Tirupachur Health Centre ,Tiruvallur ,Sub-Health and Welfare Centre ,Poondi Union ,Chief Minister ,Arignar Anna Memorial Cancer Research Centre… ,Tirupachur ,Health Centre ,Dinakaran ,
× RELATED ஆவடி சத்தியமூர்த்தி நகர் அரசினர்...