×

திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் சப்தஸ்தான விழா: அறம்வளர்த்த நாயகியுடன் ஐயாறப்பர் பல்லக்கில் புறப்பாடு

திருவையாறு: திருவையாறு ஐய்யாறப்பர் கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி இன்று சப்தஸ்தான விழா நடைபெற்றது. ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும் புறப்பாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். தஞ்சை மாவட்டம் திருவையாறில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.

இந்த ஆண்டு சித்திரை விழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. கடந்த 5ம் தேதி தன்னைத்தான பூஜித்தல் நடைபெற்றது. அன்று 6 ஊர்களிலிருந்து சாமிகள் கோயிலுக்கு வந்து சன்னதிக்கு முன் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9ம் தேதி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்தஸ்தான திருவிழா இன்று நடந்தது. விழாவையொட்டி காலை 5.30 மணிக்கு ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன்

கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, சென்று இன்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் சங்கமிக்கிறது. அன்று இரவு தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் வாணவேடிக்கை நடைபெறுகிறது. நாளை (13ம் தேதி) தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொம்மை பூ போடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் 6 ஊர் பல்லக்குகளும் கோயிலுக்குச் சென்று தீபாரதனை முடிந்து அந்தந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் செல்லும். அத்துடன் விழா நிறைவடைகிறது.விழா ஏற்பாடுகளை தருமபுர ஆதீன 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

The post திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் சப்தஸ்தான விழா: அறம்வளர்த்த நாயகியுடன் ஐயாறப்பர் பல்லக்கில் புறப்பாடு appeared first on Dinakaran.

Tags : Saptasthana festival ,Thiruvaiyaru Ayyarappar ,Ariyarappar ,Aramvalartha Nayaki ,Thiruvaiyaru ,Thiruvaiyaru Ayyarappar temple ,Chithirai festival ,Nandikeswarar ,Suyaswambigai ,Thiruvaiyaru, ,Thanjavur district… ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் புத்தாண்டு...