×

மதுரை அரசு மருத்துவமனையில் 24 ப்ரீசர் பெட்டிகளுடன் பிணவறை கட்டுமானம்

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை பிணவறையில், ஏற்கனவே 34 உடல்களை பாதுகாக்கும் வசதி உள்ளது. இந்நிலையில், கூடுதல் உடல்கள் சேர்வதால் மேலும் 24 ப்ரீசர் பெட்டிகளுடன் கொண்டு மையத்திற்கான கட்டுமான பணிகள் விரைவாக நடக்கிறது. இதுகுறித்து மதுரை அரசு மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மதுரை அரசு மருத்துவமனை பிணவறையில் ஏற்கனவே 34 உடல்களை பாதுகாக்கும் வகையிலான ப்ரீசர் பெட்டி வசதி இருக்கிறது.

இதில் பழுதடைந்தவை போக, தற்போது 28 உடல்களை மட்டுமே பாதுகாக்க முடிகிறது. இந்நிலையில் ஒரு வாரம் துவங்கி ஒரு மாதம் வரை உரிமை கோரப்படாத, வழக்கு தொடர்பான உடல்கள் போலீசார் வேண்டுகோளின் அடிப்படையில் பிணவறையில் வைக்கப்படுகிறது. இதனால், அன்றாடம் வரும் உடல்களை வைத்திருப்பதில் சிரமம் ஏற்படுகிறது. பொதுவாக ஒரு உடல் வழக்குத் தொடர்பில் இருந்தால், உடனவடியாக பிரேத பரிசோதனை நடத்தி பெற்றுக் கொள்ளவும், உரிமை கோராத அதே நேரம் வழக்கு தொடர்பில்லாத உடல்களை மருத்துவக் கல்லூரியின் அனாட்டமி பிரிவிற்கு மாணவர்கள் கல்விக்காக தானமாக வழங்கிடவும் விதிகள் உள்ளன.

எனவே விரைந்து உடல்களை பெற போலீசாரையும், உரியவர்களையும் அறிவுறுத்தி வருகிறோம்.இதுதவிர, சமீபத்தில் ஒரே நாளில் 17 உடல்கள் பிணவறைக்கு வந்தன. இப்படி கூடுதல் உடல்கள் சேரும்போது பிணவறையில் அவற்றை பாதுகாப்பதில் இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே, மேலும் 24 உடல்களை பாதுகாக்கும் வகையிலான ப்ரீசர் பெட்டிகளுடன், கூடுதல் கட்டுமானம் மதுரை அரசு மருத்துவமனையின் பிணவறை பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடித்து, அதிகளவில் உடல் வந்தாலும், அவற்றை பாதுகாக்கும் வகையில் வசதிகள் மேம்படுத்தப்படும். இவ்வாறு கூறினார்.

The post மதுரை அரசு மருத்துவமனையில் 24 ப்ரீசர் பெட்டிகளுடன் பிணவறை கட்டுமானம் appeared first on Dinakaran.

Tags : Madurai Government Hospital ,Madurai ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை