×

தமிழகத்தில் எல்லாருக்கும் எல்லாம் என்ற ஆட்சி சங்கிகளுக்கு இங்கு இடமில்லை: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

நாகர்கோவில்: தமிழ்நாட்டில் எல்லாருக்கும் எல்லாம் என்ற ஆட்சி நடக்கிறது, சங்கிகளுக்கு இங்கு இடம் இல்லை என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்து உள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டார்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி:
கடந்த காலங்களில் திருக்கோயில்களில் விளக்கு கூட எரிய வைக்க முடியாத நிலையும் , ஒரு கால பூஜை கூட நடத்த முடியாமல் இருந்த நிலையையும் மாற்றி, தற்போது அனைத்து கோயில்களிலும் திருவிளக்கு எரிகின்ற ஒரு கால பூஜை நடக்கின்ற நல்ல சூழல் வந்திருக்கின்றது. இந்த ஆண்டு இறுதிக்குள் 200 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்படும். 184 அடி உயர முருகன்சிலை மருதமலையில் நிறுவ முதல்கட்டமாக திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. விரைவில் சிலை நிறுவப்பட உள்ளது. ஈரோடு, செய்யாறு, கோவில்பட்டி ஆகிய இடங்களிலும் முருகர் சிலை அமைக்கும் பணிகள் ஆய்வில் உள்ளது. இது தமிழ் ஆட்சி என்பதால் தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிலைகள் அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும்.

திருச்செந்தூர் கோயிலில் பெருந்திட்ட வரைவு பணி என்பது இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் நடந்துள்ளது. இதற்கு முன்பு நடந்த ஆட்சியில் திருக்கோயில்களில் பெருந்திட்ட பணி என்ற ஒரு வார்த்தையே கிடையாது. 17கோயில்களில் ரூ.1700 கோடியில் பெருந்திட்ட வரைவு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராணுவ வீரர்கள் குறித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் பேச்சை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் மீது அவரின் பொதுச் செயலாளர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் எல்லாருக்கும் எல்லாம் என்ற ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் சங்கிகளுக்கு இடமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, குமரியில் பல்வேறு கோயில்களில் நடக்கும் பணிகளையும், நெல்லை டவுனில் உள்ள பிரசித்திப் பெற்ற நெல்லையப்பர் கோயிலில் ரூ.4.85 கோடி மதிப்பில் புதிய வெள்ளி தேர் அமைப்பு உள்ளிட்ட பணியையும் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘நெல்லையப்பர் கோயிலுக்கு புதிய யானை வாங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதுதொடர்பாக இந்துசமய அறநிலையத் துறை தலைமையகத்தில் வனத்துறையுடன் இணைந்து கலந்தாலோசனை கூட்டம் வரும் 14ம் தேதி நடைபெறுகிறது. ஆலோசனைகள் பெற்று புதிய யானை வாங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்றார்.

The post தமிழகத்தில் எல்லாருக்கும் எல்லாம் என்ற ஆட்சி சங்கிகளுக்கு இங்கு இடமில்லை: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Sekharbhabu ,Nagarko ,Sangis ,P. K. Sekarpapu ,Mandaikad ,Bhagwati Amman Temple ,Rajakopuram Kumbapishekam ,Kanyakumari district ,Minister of State ,Tamil ,
× RELATED சொல்லிட்டாங்க…