×

இங்கிலாந்துடன் டெஸ்ட் தொடர் ரிஷப் பண்ட் துணை கேப்டன்..? பிசிசிஐ தீவிர பரிசீலனை

புதுடெல்லி: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் துணை கேப்டனாக, ரிஷப் பண்ட் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து, வரும் ஜூன் 20ம் தேதி முதல் 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மா ஓய்வு அறிவிப்பை வெளியிட்டதை அடுத்து, இந்திய அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்படலாம் என ஏற்கனவே தகவல் வெளியானது.

இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டை நியமிப்பது குறித்து தீவிர ஆலோசனை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதுகில் காயம் ஏற்பட்டு அவ்வப்போது மருத்துவ சிகிச்சை பெற வேண்டி இருப்பதாலும், அதிக பணிச்சுமை இருப்பதாலும், 5 டெஸ்ட் போட்டிகளிலும் முழுமையாக அவர் ஆடுவது சந்தேகம் என கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட்டில் அவரது அந்தஸ்து கருதி, கேப்டன் பதவியை தவிர அதற்கு கீழான பொறுப்பை தருவது சரியாக இருக்காது என பிசிசிஐ கருதுகிறது. எனவே, துணை கேப்டன் பொறுப்பு, ரிஷப் பண்ட்டுக்கு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. ரிஷப் பண்ட், டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடி 42 ரன்னுக்கு கூடுதலாக சராசரியை வைத்துள்ளார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு எதிராக அவர் சதங்களை விளாசி உள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து செல்லும் இந்திய கிரிக்கெட் அணி பட்டியல், இம்மாதத்தின் 3வது வார கடைசியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post இங்கிலாந்துடன் டெஸ்ட் தொடர் ரிஷப் பண்ட் துணை கேப்டன்..? பிசிசிஐ தீவிர பரிசீலனை appeared first on Dinakaran.

Tags : Rishabh Pant ,England Test series ,BCCI ,New Delhi ,Indian ,England ,cricket ,Dinakaran ,
× RELATED கான்வே இரட்டை சதம்: நியூசிலாந்து 575 ரன்கள் குவிப்பு