×

திருக்கண்ணமங்கை – அம்மையப்பன் வழி ரூ.2.1 கோடி மதிப்பீட்டில் இரு வழி சாலை

திருவாரூர், மே 11: திருவாரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெற்று வரும் சாலை பணிகளை கண்காணிப்பு பொறியாளர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் மாநிலம் முழுவதும் நெடுஞ்சாலைகள் சரிவர சீரமைக்கப்படாததன் காரணமாக சாலைகள் அனைத்தும் போக்குவரத்திற்கு பயனற்றதாக இருந்து. இதன் காரணமாக நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது மட்டுமின்றி குறிப்பிட்ட நேரத்தில் வாகனங்கள் செல்ல முடியாத நிலையும் இருந்து வந்தது.

மேலும் சாலைகள் போன்றே பாலங்கள் அமைக்கும் பணியும் கிடப்பில் போடப்பட்டதன் காரணமாக புதிய பாலங்கள் கட்டுமான பணியும் தடைப்பட்டன. இதற்கிடையே கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில அரசின் நெடுஞ்சாலைகளை உடனடியாக சீரமைக்குமாறும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு தேவையான நிலம எடுக்கும் பணிகள் மற்றும் என்ஓசி சான்று மற்றும் சாலை அமைப்பதற்கு தேவையான மண் மற்றும் அரளைகள் போன்றவற்றினை உடனடியாக ஏற்பாடு செய்து கொடுக்குமாறும் நெடுஞ்சாலை துறைக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ.வேலு மேற்பார்வையில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சீரமைக்கப்படாத அனைத்து சாலைகளும் திருவாரூர் மாவட்டம் உட்பட மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு வருட காலத்திற்குள்ளாகவே மாநில நெடுஞ்சாலை துறையின் மூலம் சீரமைக்கப்பட்டன.
இதற்கு தமிழக முதல்வருக்கும், நெடுஞ்சாலை துறைக்கும் பொதுமக்கள் நன்றியையும், பாராட்டினையும் தெரிவித்துள்ள நிலையில் அதன்பின்னரும் ஓவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய சாலைகள் அமைக்கும் பணி, பாலங்கள் கட்டுமான பணி மற்றும் பழைய சாலைகள் சீரமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு நடைபெற்று வரும் பணிகளை கண்காணிப்பு பொறியாளர் தலைமையிலான உள்தணிக்கை குழுவினர் ஆய்வு செய்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருவாருர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ள பணிகளை திருச்சி நபார்டு மற்றும் கிராம சாலைகள் வட்ட கண்காணிப்பு பொறியாளர் நிர்மலா தலைமையிலான பொறியாளர் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி திருவாரூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட திருக்கண்ணமங்கையில் இருந்து அம்மையப்பன் செல்லும் சாலையில் 1.4 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.2.1 கோடி மதிப்பீட்டில் இரு வழி சாலையாக அகலப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளதையடுத்து சாலையின் தரம் மற்றும் நீளம், அகலம், சுற்றளவு போன்றவை குறித்து இயந்திரங்களை கொண்டு ஆய்வு செய்தனர். இதில் கோட்ட பொறியாளர்கள் இளம்வழுதி, சரவணன், உதவி கோட்ட பொறியாளர்கள் ஜெயராமன்,மாரிமுத்து மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post திருக்கண்ணமங்கை – அம்மையப்பன் வழி ரூ.2.1 கோடி மதிப்பீட்டில் இரு வழி சாலை appeared first on Dinakaran.

Tags : -lane road ,Thirukannamangai ,Ammaiyappan ,Thiruvarur ,Highways Department ,Thiruvarur district ,AIADMK ,Tamil Nadu ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை