×

ஊட்டியில் கோடை விழா நாளை தொடங்குகிறது மலர் கண்காட்சி முதல்வர் தொடங்கி வைக்கிறாரா?: மே 12ம் தேதி குன்னூர் செல்ல உள்ளதாக தகவல்

ஊட்டி: ஊட்டியில் கோடை விழா நாளை தொடங்குகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மே 12ம் தேதி ஊட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மே 15ம் தேதி மலர் கண்காட்சியை துவக்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் கோடை விழா கலைநிகழ்ச்சி அங்குள்ள படகு இல்லத்தில் நாளை (10ம் தேதி) தொடங்கி 15ம் தேதி வரை நடக்கிறது. கோடை விழா சிறப்பு நிகழ்ச்சியான படகுப்போட்டி 13ம் தேதி காலை 11 மணியளவில் ஊட்டி ஏரியில் நடக்கிறது. ஆடவர், மகளிர் என தனித்தனியாகவும், இருபாலரும் இணைந்து பங்கு பெறும் போட்டியும் சுற்றுலா துறையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நாளை துவங்கி 12ம் தேதி வரை 3 நாட்கள் நடத்தப்படுகிறது. கண்காட்சியை முன்னிட்டு பல ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு பிரமாண்ட டால்பின்கள், மீன், சிப்பி, நத்தை, ஆமை, பென்குயின் உட்பட பல்வேறு கடல் வாழ் உயிரினங்கள் அமைக்கப்படுகிறது.

இதுதவிர ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் புகைப்பட கண்காட்சி வருகிற 31ம் வரை நடக்கிறது. இதனை இலவசமாக கண்டுகளிக்கலாம். இதன் ஒரு பகுதியாக புகைப்பட போட்டி நடத்தப்பட உள்ளது.
இதற்கான புகைப்படங்களை பொதுமக்கள் 12ம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம் என கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியுள்ளார். இதில் சிறந்த புகைப்படங்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஊட்டியில் மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 5ம் தேதி ஊட்டி வந்தார். தொடர்ந்து 6ம் தேதி நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல் நாட்டினார். ஊட்டியில் புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்தார். இந்நிலையில், ஓய்வுக்காக மீண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 12ம் தேதி அல்லது 14ம் தேதி ஊட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. . முதல்வர் ஊட்டி வரும் நிலையில், மலர் கண்காட்சியை மே 15ம் தேதி அவர் துவக்கி வைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், மலர் கண்காட்சிக்கான பணிகளும் தீவிரமாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடக்கிறது.

 

The post ஊட்டியில் கோடை விழா நாளை தொடங்குகிறது மலர் கண்காட்சி முதல்வர் தொடங்கி வைக்கிறாரா?: மே 12ம் தேதி குன்னூர் செல்ல உள்ளதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Summer festival in ,Ooty ,Chief Minister ,Coonoor ,Summer festival in Ooty ,M.K. Stalin ,Ooty, Nilgiris district… ,Dinakaran ,
× RELATED கோயில்களில் முதல் மரியாதை என்பது...