×

பகவதி அம்மனாக வழிபடப்படும் கண்ணகி!

மலை போல குவிந்து கிடக்கும் சிவப்புத் துணிகளுக்கு மேல் நின்று கையில் வாளுடன் தலையில் அடித்துக் கொண்டே ரத்தம் சொட்ட சொட்ட பயங்கர ஆவேசமாக பகவதி அம்மனை திட்டிக் கொண்டே பாடும் திருவிழா கேரளாவில் உள்ள கொடுங்கலூர் பகவதி அம்மன் கோயிலில் நடைபெறுவது மிகவும் பிரசித்தம். சிவப்பு புடவை, காலில் சிலம்பு, கையில் வாள் ஏந்தியபடி ஆவேசமாக அம்மனை திட்டி தீர்க்கின்றனர் பக்தர்கள். அந்த ஆலயத்தில் பகவதி அம்மனாக வீற்றிருப்பது மதுரையை எரித்து ஆவேசமாக சென்ற கண்ணகி தான். ஒரு நகரையே எரித்தவளின் ஆவேசம் அடங்குவதற்காக இப்படி ஆக்ரோஷமாக வசைபாடி சாந்தப்படுத்துகின்றனர் இந்த மக்கள்.

தன் கணவனின் இறப்பிற்கு காரணமான அரசனிடம் நீதிக் கேட்டு, உக்கிரத்துடன் இருந்த கண்ணகியை போல் அங்குள்ள பக்தர்களையும் ஆக்ரோஷ நிலையில் காணலாம். இவர்கள் கண்ணகியை தெய்வமாக வணங்குகிறார்கள். பூம்புகாரில் சிலப்பதிகாரம் குறித்த அருங்காட்சியகமும் கண்ணகியின் சிலையும் உள்ளது. இங்குள்ள மக்கள் கண்ணகிக்கு ஏன் அதிக முக்கியத்துவம் தருகிறார்கள்… அதற்கான காரணம் என்ன என்பது குறித்து எழுத்தாளரும் ஆய்வாளருமான சத்தியப் பெருமாள் பாலுசாமியிடம் கேட்ட போது…

‘‘மதுரையை எரித்த கண்ணகி, செய்வதறியாது நின்ற போது, அவள் முன் மதுரையின் தெய்வமான மதுராபதி காட்சியளிக்கிறாள். ஆண் பாதி பெண் பாதி கோலத்தில் இருக்கும் மதுராபதி கண்ணகியிடம், ‘மதுரை மாநகர் உன்னால் எரிந்தது என்று வருந்தாதே… இந்தநாளில் தீக்கிரையாக வேண்டும் என்பது முன்பே சொல்லப்பட்ட ஜோதிட சொல். உனக்கும் உன் கணவனுக்கும் நேர்ந்த துன்பங்களும், முன்வினைப் பயன்களே. முன் ஜென்மத்தில் கோவலன் சொன்ன ஒரு பொய் குற்றச்சாட்டினால் பொற்கொல்லன் ஒருவனின் உயிர் அநியாயமாகப் பறிபோனது.

அவனது மனைவி நீலி 14 நாட்கள் தனது கணவனின் மரணத்திற்கு நீதி கேட்டு ஊரெல்லாம் அலைந்து திரிந்தாள். இறுதியில், ஒரு உயர்ந்த மலையின் மீது ஏறி, ‘எங்களின் துன்பத்திற்குக் காரணமானவர்கள் கண்டிப்பாக ஒருநாள் நாங்களடைந்த இதே துன்பத்தை அடைவார்கள்’ என்று சபித்துவிட்டுக், கீழே குதித்து இறந்து போனாள் என்று தேவி கூறியதை கேட்ட கண்ணகி, நீலியைப் போலவே 14 நாட்கள், வைகையின் கரையோரமாக மேற்குத்திசை நோக்கி பயணித்து நெடுவேள் குன்றம் என்னும் இடத்தை அடைகிறாள். அங்குள்ள குறவர்களிடம் தனது வரலாற்றை கூறிவிட்டு மலையிலிருந்து கீழே குதித்து இறந்து போகிறாள்.

கண்ணகியின் சிறப்பை உணர்ந்த குறவர்கள், அவளுக்கு ஒரு கோவில் எழுப்பி பூஜை செய்து வழிபடுகிறார்கள். அந்தப் பகுதியை ஆண்ட சேரன் செங்குட்டுவனுக்கு இது தெரிய வருகிறது. சீத்தலைச் சாத்தனார் மூலம் கோவலன், கண்ணகியின் வரலாற்றை அறிந்து பெரு வியப்பிற்கு ஆளாகிறான் செங்குட்டுவன். தனது மனைவியான சேரமாதேவியிடம், ‘பாண்டியன் நெடுஞ்செழியன் இறந்ததும் உயிரை விட்ட பாண்டிமாதேவி நமது வழிபாட்டிற்கு உரியவளா? அல்லது கணவனின் பழிதுடைக்க வாதாடி உயிர் மாய்த்த கண்ணகி வணங்கத்தக்கவளா?” என்று கேள்வி எழுப்புகிறான்.

அந்தக் காலத்தில் கணவன் இறந்த செய்தி கேட்ட நொடியே இறந்து போவது முதல் நிலை கற்பும், இறந்த கணவனின் சிதையில் தானும் இறங்குவது இடை நிலைக் கற்பு என்றும், மூன்றாவது நிலையாக பொட்டு அழித்து, தாலி அறுத்து தன்னை அலங்கரிக்காமல், வெள்ளைப் புடவை உடுத்திக் கொண்டு, உப்பில்லாத உணவுகளை உண்டு, வெறும் தரையில் படுத்து தனியாக வாழ்வது என்பது மூன்றாவதாக பார்க்கப்பட்டது. இது குறித்து செங்குட்டுவன் தன் மனைவியிடம் கேள்வி எழுப்ப, ‘கண்ணகி தான் வணங்கத்தக்கவள்’ என்று முன்மொழிகிறாள்.

கண்ணகி சாதாரண வணிகர்குலத்துப் பெண். அப்படிப்பட்டவளைப் போற்றத்தக்க தெய்வமாக முன்மொழிய காரணம் அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதியினை எதிர்த்துப் போராடிய குணத்திற்காகவே அவளை வணங்கத்தக்க தெய்வமாக கூறுகிறாள் சேரமாதேவி. செய்யாத தப்பிற்கு கோவலனைக் கொன்றதற்காகவே பாண்டிய நாட்டை கண்ணகி எரித்தாள் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால், சிலப்பதிகாரம் அப்படிக் கூறவில்லை. தான் தோற்றுவிட்டதை உணர்ந்த அடுத்த நொடி பாண்டிய மன்னன் இறந்தான்.

அத்துடன் வழக்கு முடிந்துவிட்டது. ஆனால் அதன் பிறகு மதுரையை எரிக்க காரணம் ஏன்? இந்தக் கேள்விக்கான விடைதான் கண்ணகியை நாம் தெய்வமாகக் கொண்டாட காரணம்.
பாண்டிய மன்னன் இறந்த அடுத்த நொடியே பாண்டிமாதேவியும் இறந்து விடுகிறாள். இதைப் பார்த்த கண்ணகிக்குக் கடும் கோபம் ஏற்படுகிறது. காரணம், கணவர் இறந்தவுடன் இறக்கும் மனைவி முதல்நிலைக் கற்பினவளாகப் போற்றப்படுவாள்.

கணவனை இழந்த பெண் வேறெவரையும் கனவில் கூட நினைத்துப் பார்க்கக் கூடாது என்பதற்காகவே, இப்படிப்பட்ட நிலைகளை வைத்திருந்தது அன்றைய ஆணாதிக்கச் சமூகம். மாதவியை விட்டுவிலகிய கோவலனை மறுகேள்வியின்றி ஏற்றுக்கொள்ளும் கண்ணகி, அங்கிருந்து மதுரைக்கு கிளம்பி வருகிறாள். காரணம், அன்றைய சமூகத்தில், பெண்களின் நிலை அப்படித்தான் இருந்தது. அதே சமயம் தன் கணவன் கள்வன் அல்ல என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறாள்.

அதில் அரசியின் உயிரும் பிரிந்ததை நினைத்து கண்ணகிக்குக் கடுமையான சீற்றத்தை உண்டாக்குகிறது. கணவன் இறந்த அடுத்த நொடி உயிரைவிடாத தன்னைப் பார்த்து அவள் பரிகசிப்பதாகத் தோன்றுகிறது. சினம் பொங்குகிறது. அந்த சினத்துடன், பத்தினிப் பெண்கள் ஏழுபேரின் கதைகளை சொல்கிறாள் கண்ணகி. கதைகள் எல்லாமே கணவனுக்குக் கீழ்படிந்த பெண்களின் கதைகளோ அல்லது கணவனுக்காக உயிரை விட்ட பெண்களின் கதைகளோ கிடையாது.

அனைத்துமே தாம் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதற்காக அரும்பாடுபட்டபெண்களின் கதைகள். நீதியை கொன்றுவிட்டுக் கணவனுடன் இறந்து போனால், நீ பெரியவளா என்பதே கண்ணகியின் கேள்வி! மதுரையை விட மாட்டேன் என்று சூளுரைத்து அடக்குமுறை உடைய சமூகத்தை எரித்திருக்கிறாள்.

அப்படிப்பட்ட கண்ணகியைதான் பகவதி அம்மன் என்று அழைக்கப்பட்டு, ேகாவிலும் எழுப்பப்பட்டு கொடுங்கோளூர் பகவதி அம்மனாக வழிபடப்படுகிறது. கேரளாவில் பகவதி அம்மன் கோவில் கட்டும் போது இக்கோவில் பிடிமண்ணை எடுத்துச் சென்று கோவில் கட்டுகிறார்கள். பகவதி அம்மன் கோவில்கள் அனைத்துமே கண்ணகிக்காக எழுப்பப்பட்ட கோவில். பரணி ஆடுதல் இந்தக் கோவிலில் பிரபலமானது. பரணி ஆடும் போது கையில் ‘பள்ளிவாள்’ எனப்படும் கொடுவாளை ஏந்தி, காலில் சிலம்பு கட்டி ஆடுவார்கள்.

கோவிலின் முன்பு சிவப்பு புடவைகள் விரிக்கப்பட்டு அதில் பரணி ஆடுவார்கள். சிவப்பு புடவைகள் கோவலனின் ரத்தத்தை குறிக்கிறது. பரணி ஆடும் போது தெறி பாடும் வழக்கமுண்டு. தெறியின் போது கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டு ஆடுவது, அம்மனை திட்டிப் பாடுவது இந்தக் கோவிலில் மட்டுமே உள்ளது. இதற்கு பலவிதமான காரணங்கள் சொல்லப்பட்டாலும் நான் ஆய்வு செய்ததில் கோவிலை சுற்றியும் நிறைய திட்டுகள் உள்ளன.

அவை ஒவ்வொரு ஜாதிகளை குறிக்கும். அந்த மக்கள் பிற்படுத்தப்பட்ட பட்டியலினத்தினை சேர்ந்தவர்கள். ஆனாலும் இந்தக் கோவிலை வெகுமக்கள் தங்களின் உணர்வாக பார்க்கிறார்கள். கேரளா முழுவதும் பகவதி அம்மன் பெயரில் கண்ணகி வழிபாடு இருப்பதை போன்று தமிழ்நாட்டிலும் மாரியம்மன் வழிபாடாக இருக்கிறது. மாரியம்மன் விதவை திருவிழா காலங்களில் வெள்ளை உடை உடுத்தி வழிபடுவார்கள். சிலம்பு வைத்து பாடுவது, மதுரையை எரித்ததற்கான மிச்சமாக குண்டத்தில் இறங்குவது அதனுடைய நீட்சியே’’ என்கிறார் சத்தியப்பெருமாள் பாலுசாமி.

செய்தி: மா.வினோத்குமார்

படங்கள்: ரஞ்சித் ரங்கநாதன்

The post பகவதி அம்மனாக வழிபடப்படும் கண்ணகி! appeared first on Dinakaran.

Tags : Kannagi ,Bhagavadi Amman ,Bhagwati Amman ,Kogungalur ,Bhagwati Amman Temple ,Kerala ,
× RELATED பாதுகையின் பெருமை