×

பஹல்காம் தாக்குதல் நடந்து இரு வாரங்களாகியும் தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை : ஒன்றிய அரசு

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இந்திய ராணுவ பெண் அதிகாரிகள் கர்னல் சோபியா குர்ஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் விளக்கம் அளித்தனர். வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி பேசுகையில், “தீவிரவாதிகளால் 10 ஆண்டுகளில் 350 இந்தியர்கள் உயிரிழப்பு. மும்பை தாக்குதலுக்கு பிறகு, காஷ்மீர் பஹல்காமில் பாகிஸ்தான் நடத்தியது காட்டு மிராண்டித்தனமான தாக்குதல். காஷ்மீரின் அமைதி மற்றும் வளர்ச்சியை தடுப்பதே பாகிஸ்தான் தீவிரவாதிகளின் நோக்கம்.

பஹல்காம் தாக்குதல் இந்தியாவில் மதக் கலவரத்தை உருவாக்கவே நடத்தப்பட்டது. பஹல்காம் தாக்குதலுக்கு ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (Resistance Front) என்ற குழு பொறுப்பேற்றுள்ளது. இந்த குழு லஷ்கர்-இ தொய்பாவுடன் தொடர்புடையது. இதன் அடிப்படையில், பாகிஸ்தானுக்கு இதில் உள்ள தொடர்புகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு நீண்டகாலமாக பாகிஸ்தான் உதவியாக இருந்து வருகிறது. தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்கு தகவல் அனுப்பி பதில் பெற்றதற்கான ஆதாரம் உள்ளது. பஹல்காம் தாக்குதல் நடந்து இரு வாரங்களாகியும் தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. பயங்கரவாதிகளுக்கு ஒரு பாதுகாப்பான புகலிடமாக பாகிஸ்தான் இருந்து வருகிறது. பயங்கரவாதத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்தியா பதில் தாக்குதலை மேற்கொண்டு, நமது உரிமையை நிலைநாட்டியது. தீவிரவாத முகாம்கள் குறிவைத்து துல்லியமாக தாக்கப்பட்டது.

பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான குற்றவாளிகளை இந்தியா தண்டித்துள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளைக் எங்கள் உளவுத்துறை அமைப்புகள் தீவிரமாக கண்காணித்து வருகிறது. அதன் அடிப்படையில், இந்தியாவில் மேலும் தாக்குதல்கள் நடக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் உட்கட்டமைப்பை தகர்க்கவே ஆபரேஷன் சிந்தூர் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. தீவிரவாதிகளை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தீவிரவாத முகாம்கள் மட்டுமே தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. மோதலை அதிகப்படுத்தும் வகையில் தாக்குதல் நடத்தப்படவில்லை,” இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் பேசுகையில், “இந்திய ராணுவ தாக்குதலில் பாகிஸ்தான் குடிமக்கள் ஒருவர்கூட கொல்லப்படவில்லை. ஆபரேஷன் சிந்தூர் – நேற்று நள்ளிரவு 1.05 மணி முதல் 1.30 மணி வரை மேற்கொள்ளப்பட்டது. 9 தீவிரவாத மூகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்டது. நம்பகமான உளவுத்துறை தகவல்கள் அடிப்படையிலேயே இந்த முகாம்கள் கண்டறியப்பட்டன. பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் இலக்குகள் மீது துல்லியமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது; போரை தூண்டும் வகையில் இந்த தாக்குதலை நடத்தவில்லை. பாகிஸ்தானின் எந்தவொரு எதிர் தாக்குதலையும் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளது,” இவ்வாறு கூறினார்.

The post பஹல்காம் தாக்குதல் நடந்து இரு வாரங்களாகியும் தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை : ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Bahalkam attack ,Union Government ,Delhi ,Foreign Secretary ,Vikram Misri ,Indian Army ,Colonel ,Sophia Kurshi ,Wing Commander ,Viomika Singh ,Sindur ,Bahalkam ,Dinakaran ,
× RELATED எஸ்.ஐ.ஆர். பணிக்கு கூடுதல் ஆவணங்கள்...