×

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பரிந்துரைகளை உடனே செயல்படுத்த வேண்டும்: கேரளா அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரதான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கிருஷ்ணமூர்த்தி, உமாபதி மற்றும் சபரீஸ் சுப்ரமணியன் ஆகியோர், “அணை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு விவகாரத்தில் கேரளா அரசு எங்களுக்கு தொடர்ந்து இடையூறு செய்து வருகிறது. உச்ச நீதிமன்றம் முன்னதாக தெளிவாக உத்தரவு பிறப்பித்தும் அதனை கேரள அரசு சிறிதும் பொருட்படுத்தவில்லை.

பராமரிப்பு பணிகளுக்கு தேவையான உபகரணங்களை எடுத்து செல்ல கூட அனுமதி வழங்க மறுத்து வருகிறது. கடந்த 19 வருடங்களாக கேரளா அரசு இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு முறையும் நாங்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழல் நீடித்து வருகிறது” என்ற கடுமையான குற்றச்சாட்டுகளுடன் வாதங்களை முன்வைத்தனர். தொடர்ந்து ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி, “ முல்லைப் பெரியாறு அணை மற்றும் பேபி அணையை பராமரிக்க தமிழ்நாடு அரசுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று எங்கள் தரப்பில் இருந்து பலமுறை கேரளா அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.

ஆனால் அதை அவர்கள் கருத்தில் கொள்ளாமல் பராமரிப்பு பணியை செய்யவிடாமல் தமிழ்நாடு அரசுக்கு முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றனர் ” என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “ முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு, அதற்கான ஒத்துழைப்பு வழங்குதல் உள்ளிட்ட மேற்பார்வை குழுவின் பரிந்துரைகளை கேரளா அரசு அடுத்த இரண்டு வாரத்தில் செயல்படுத்த வேண்டும். இதைத்தவிர அதில் குறிப்பிடப்பட்டுள்ள அணையில் நிகழ் நேரத்தின் மழை அளவின் பதிவு ஆகியவற்றை கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய அரசுகள் செயல்படுத்த வேண்டும். முல்லைப் பெரியாறு அணை ஆயிரம் ஆண்டுகளின் பாதுகாப்பான கட்டுமானம் என்று கூறி வழக்கை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

The post முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பரிந்துரைகளை உடனே செயல்படுத்த வேண்டும்: கேரளா அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court of Action Order ,Kerala Government ,New Delhi ,Supreme Court ,Suryakant ,Dimankar Dutta ,Mullaipperiyaru dam ,Tamil Nadu government ,Krishnamoorthy ,Umapathi ,Sabarees ,Mullai ,Dinakaran ,
× RELATED கடும் மூடுபனி காரணமாக அசாமில் ரயில்...