×

கும்பகோணம் அருகே பால மாரியம்மன் கோயிலில் 115ம் ஆண்டு சித்திரை திருவிழா

 

கும்பகோணம், மே 7: கும்பகோணம் அருகே கொட்டையூரில் உள்ள பால மாரியம்மன் கோயிலில் 115ம் ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்தனர். கும்பகோணம் அருகே கொட்டையூர் வாணியத் தெருவில் அமைந்திருக்கும் பால மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டும் 115ம் ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 27ம் தேதி பூச்சொரிதல் மற்றும் காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காவிரி ஆற்றில் இருந்து சக்தி கரகம், வேல், பால்குடம், காவடி, அலகு காவடி, அக்னி கொப்பரை எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து ஆலயம் வந்தடைந்தது. தொடர்ந்து அம்பாளுக்கு மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பாலபிஷேகம் நடைபெற்றது. இரவு தீமிதி திருவிழாவும், தொடர்ந்து புஷ்ப பல்லாக்கில் சாமி வீதி உலா நடைபெற்றது. வருகிற 11ம் தேதி விடையாற்றியுடன் இவ்வாண்டுக்கான சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தெருவாசிகள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

 

The post கும்பகோணம் அருகே பால மாரியம்மன் கோயிலில் 115ம் ஆண்டு சித்திரை திருவிழா appeared first on Dinakaran.

Tags : 115th Chithirai festival ,Pala Mariamman Temple ,Kumbakonam ,Kottaiyur ,Vaniyam Street ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை