×

முல்லைப்பெரியாறு அணையை பராமரிக்க தமிழ்நாடு அரசை அனுமதிக்க வேண்டும் : கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!!

டெல்லி : முல்லைப்பெரியாறு அணையை பராமரிக்க தமிழ்நாடு அரசை அனுமதிக்க வேண்டும் என்று கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை 2 வாரத்தில் கேரளா செயல்படுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பராமரிப்பு பணி மேற்கொள்ள கேரளா அனுமதிக்காததை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் நடந்த விசாரணையில், அணை பாதுகாப்பாக இல்லை என்ற கேரள வழக்கறிஞரின் கருத்து நிராகரிக்கப்பட்டது.

தொடர்ந்து, நீதிமன்றத்தில் நடைபெற்ற வாதங்கள்

தமிழ்நாடு அரசு : தொடர்ச்சியாக இவ்விவகாரம் நீண்டுகொண்டே செல்கிறது. ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு அரசு, நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெறுகிறது. எனினும், அதை செயல்படுத்த கேரள அரசு முட்டுக்கட்டை போடுகிறது.அணையை பராமரிக்க மரங்களை அகற்ற முதலில் அனுமதி அளித்த கேரளா, பின்னர் மறுத்தது. புதிய அணை கட்ட வேண்டும் என கூறி வரும் கேரளா, பராமரிப்புக்கு அனுமதி மறுக்கிறது. உச்சநீதிமன்றம் 2006ல் பிறப்பித்த உத்தரவுப்படி பராமரிப்பு மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

கேரள அரசு தரப்பு : முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பில் குறைபாடு உள்ளது. ஆகவே இந்த விவகாரத்தில் முடிவுக்கு வர புதிய ஆணை ஒன்றே தீர்வு

நீதிபதிகள்: “அணை பாதுகாப்பு குறைபாடாக உள்ளது என தொடர்ந்து கூறும் நீங்கள், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிப்பது இல்லை. முதலில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்குங்கள்.புதிய அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வேறு விவகாரம், தற்போது அணை பராமரிப்புக்கு அனுமதிக்க வேண்டும்.

கேரள அரசு: “தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரை அணையை பராமரிக்க விருப்பம் காட்டவில்லை. நீர் மட்டத்தை உயர்த்துவதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர்”

நீதிபதிகள்: “பொதுவான குற்றச்சாட்டாக வைக்கிறீர்கள். தமிழ்நாடு அரசு எங்கே அப்படி தெரிவித்தது என்பதை காட்டுங்கள்”

நீதிபதிகள் : முல்லை பெரியாறு அணையை பராமரிக்க தமிழ்நாடு அரசு முன்வைத்துள்ள கோரிக்கையை, அணையின் மேற்பார்வை கண்காணிப்புக் குழு ஆய்வு செய்து முடிவு எடுக்கப்பட வேண்டும்.தமிழ்நாடு அரசின் கோரிக்கையை மேற்பார்வை குழு பரிசீலிக்காவிட்டால் நீதிமன்றம் உத்தரவிட நேரிடும். முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்க மேற்பார்வை குழு ஏப்ரல் 25ம் தேதி வழங்கி உள்ள பரிந்துரைகளை கேரள அரசு செயல்படுத்த வேண்டும். அணை பராமரிப்பு, அதற்கான ஒத்துழைப்பு வழங்குதல் உள்ளிட்ட பரிந்துரையை 2 வாரத்தில் செயல்படுத்த ஆணையிடுகிறோம். 1000 ஆண்டு கட்டுமானங்களே பாதுகாப்பாக உள்ளதால் அணை பாதுகாப்பு குறித்து அச்சம் வேண்டாம். மேற்பார்வை குழு பரிந்துரையை செயல்படுத்தியது குறித்து 2 மாநிலங்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு தெரிவித்து. வழக்கை வருகிற 19ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

The post முல்லைப்பெரியாறு அணையை பராமரிக்க தமிழ்நாடு அரசை அனுமதிக்க வேண்டும் : கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Mullaperiyar ,Supreme Court ,Kerala government ,Delhi ,Mullaperiyar dam ,Kerala ,Mullaperiyar Dam Monitoring Committee ,
× RELATED கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில்...