×

பெரம்பலூரில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்

*அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

பெரம்பலூர் : மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்திட வேண்டும் என பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கலெக்டர் அலுவலக வராண்டாவில் மாற்றுத்திறனாளிகள் காத்திருந்த இடத்திற்கே சென்ற மாவட்டக் கலெக்டர் அவர்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். பின்னர், கடந்த ஏப்ரல் 16 அன்றுநடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் அரும்பாவூர் பேரூராட்சியில் நடைபெற்ற முகாமில் குலாம் பாட்ஷா என்பவர் நத்தம் பட்டா மாற்றம் வேண்டி மாவட்டக் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.

அவரது கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நேற்று அவருக்கு நத்தம் பட்டா மாற்றத்திற்கான ஆணையினை மாவட்டக் கலெக்டர் வழங்கினார். பின்னர் தாட்கோ சார்பில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்தின் கீழ் துரைசாமி மனைவி சரசு என்பவருக்கு மாதம் ரூ1,000 என்ற விதத்தில் 21 மாதங்களுக்கான முதியோர் ஓய்வூதியம் ரூ.21 ஆயிரத்திற்கான காசோலையினை மாவட்டக் கலெக்டர் வழங்கினார்.

இந்தக்கூட்டத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள், மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் மற்றும் கடந்த வாரங்களில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஒரு மாதத்திற்கு மேலாக நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்களின் விவரங்களையும், சம்பந்தப் பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்டக் கலெக்டர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப் பட்டா, விதவை உதவித் தொகை, ஆதரவற்றவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம், அடிப்படை வசதிகள் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை பொது மக்களிடமிருந்து பெற்றுக் கொண்ட மாவட்டகலெக்டர், விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், மாற்றுத் திறனாளிகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்திடுமாறும், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

நேற்று நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 282 மனுக்கள் பெறப்பட்டது.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் சொர்ணராஜ், மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ்குமார், ஆதி திராவிடர் நல அலுவலர் வாசுதேவன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சுந்தரராமன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், மாவட்ட தாட்கோ மேலாளர் கவியரசு உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூரில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Public Grievance Redressal Meeting ,Perambalur ,Collector ,Grace Bachao ,Public Grievance Redressal Day ,Perambalur District Collector's Office ,Public Grievance Redressal ,Dinakaran ,
× RELATED இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட...