×

வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை பயன்பாட்டிற்காக ரூ.13.73 கோடி மதிப்பீட்டிலான 155 புதிய வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை பயன்பாட்டிற்காக ரூ.13.73 கோடி மதிப்பீட்டிலான 155 புதிய வாகனங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (5.1.2026) சென்னை, தீவுத்திடலில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் பணிபுரியும் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரக அலுவலர்கள், சார் ஆட்சியர்கள், துணை ஆட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் ஆகியோரின் பயன்பாட்டிற்காக 13 கோடியே 73 லட்சத்து ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 155 புதிய வாகனங்களை (Mahindra Bolero B4 AC BS-VI) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மாநிலத்தின் நிர்வாக அமைப்புக்கு முதுகெலும்பாக விளங்குவதோடு, அரசின் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது. மேலும், மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் மக்கள் துயர் துடைக்கும் துறையாகவும் இத்துறை விளங்கி வருகிறது. எனவே, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் பணியாற்றும் உயர் அலுவலர்களுக்கு வாகனங்கள் மிகவும் இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது. 2025-2026ம் ஆண்டிற்கான வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கையில், “வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரக அலுவலர்களுக்கு 2 புதிய வாகனங்கள், சார் ஆட்சியர்கள், துணை ஆட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர்களுக்கு 153 புதிய வாகனங்கள் ஆக மொத்தம் 155 புதிய வாகனங்கள் ரூ.16.71 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.

மேற்கண்ட அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரக அலுவலர்களுக்கு 2 புதிய வாகனங்கள், சார் ஆட்சியர்கள், துணை ஆட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர்களுக்கு 153 புதிய வாகனங்கள், என மொத்தம் 13 கோடியே 73 லட்சத்து ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 155 புதிய வாகனங்களை (Mahindra Bolero B4 AC PS BS-VI) முதலமைச்சரால் இன்றைய தினம் மேற்கண்ட உயர் அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது. இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை வருவாய்த்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 36 கோடியே 74 லட்சம் ரூபாய் செலவில் 370 புதிய வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில், வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர் முனைவர் மு. சாய் குமார் இ.ஆ.ப., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பெ. அமுதா, இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் (வருவாய் நிருவாகம்) முனைவர் ச. நடராஜன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Revenue and Disaster Management Department ,Chennai ,
× RELATED மதுரைக்கு வந்த முதல்வர்...