×

பேருந்தை வேகமாக ஓட்டி சென்றதை தட்டிக்கேட்ட வழக்கறிஞர், செவிலியர் மீது தாக்குதல்

 

புதுச்சேரி, மே 5: புதுச்சேரி வில்லியனூர் பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (38). இவரது மகன் தமிழ் அழகன். இவர் புதுவை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று மாலை, தமிழ் அழகன் மூலகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் அவரது தோழியை பைக்கில் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மூலகுளம் அருகே தனியார் பேருந்து ஒன்று அதிவேகமாக வந்து தமிழ் அழகன் பைக்கை மோதுவது போல் வந்ததால் நிலை தடுமாறி தமிழ் அழகன் மற்றும் தோழி ஆகியோர் கீழே விழுந்தனர்.

இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. பிறகு தமிழ் அழகன் பேருந்தை பின்தொடர்ந்து சென்று அரும்பார்த்தப்புரம் பகுதியில் நின்றிருந்த பேருந்தின் ஓட்டுநரிடம் ஏன் இப்படி அதிவேகமாக செல்கிறீர்கள். மாணவ, மாணவிகள் செல்லும் நேரம் தானே என்று கேட்டுள்ளார். இதற்கு பேருந்து ஓட்டுனர் ராஜசேகர் மற்றும் நடத்துனர் பிரசாந்த் ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி பேருந்தை ஏற்றி கொலை செய்துவிட்டு அபராதம் கட்டிவிட்டு சென்றுவிடுவோம் என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

அப்போது பேருந்தில் இருந்த உரிமையாளர் கோடீஸ்வரன், பேருந்தில் இருந்து இறங்கி வந்து தமிழ் அழகனை தாக்கியுள்ளார். அப்போது மறிக்க சென்ற தோழியையும் தாக்கியுள்ளனர். இதில் காயடைந்த தமிழ் அழகன் அங்கேயே மயங்கி விழுந்துவிட்டார். பிறகு அவர்கள் பேருந்தை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தமிழ் அழகன் அகரம் பகுதியில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து விஜயலட்சுமி ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பேருந்தை வேகமாக ஓட்டி சென்றதை தட்டிக்கேட்ட வழக்கறிஞர், செவிலியர் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Vijayalakshmi ,Perumalpuram ,Villiyanur, Puducherry ,Alagan ,Tamil ,Moolakulam… ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை