×

1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி; ராஜஸ்தானை வீழ்த்தி பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்கும் கொல்கத்தா: ரியான் பராக் அதிரடி ஆட்டம் வீண்

கொல்கத்தா: ஐபிஎல் டி20 கிரிக்கெட் 18வது சீசனில், நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்த 53வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ேமாதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக சுனில்நரேன்-குர்பாஸ் களமிறங்கினர். ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில், 2வது ஓவரில் அதிரடி வீரர் சுனில் நரேன் 11 ரன்னில் யுத்வீர்சிங் பந்தில் கிளீன்போல்டானர். அடுத்து களமிறங்கிய கேப்டன் ரகானே நிலைத்து நின்று ஆட, மறுமுனையில் குர்பாஸ் 25 ரன்னில் தீக்சனா பந்தில் அவுட்டானார். 3வது விக்கெட்டிற்கு ரகானேவுடன் ஜோடி சேர்ந்த ரகுவன்சி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கொல்கத்தா அணியின் ரன்னும் மளமளவென உயர்ந்தது.
12.4 ஓவரில் 111 ரன் எடுத்திருந்த நிலையில், கேப்டன் ரகானே 30 ரன்னில் ரியான் பராக் பந்தில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ரசல், ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் பறக்க விட்டார்.

19வது ஓவரில் நன்றாக ஆடிக்கொண்டிருந்த ரகுவன்சி 44 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் ரசல் காட்டிய அதிரடியால், கொல்கத்தா 206 ரன் குவித்தது. ரசல் 57 ரன் (25 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்), ரிங்குசிங் 19 ரன் (1 பவுண்டரி, 2 சிக்ஸ்) களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் தரப்பில் ஆர்ச்சர், யுத்வீர்சிங், தீக்சனா, ரியான் பராக் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். அடுத்து 207 என்ற இமாலய இலக்கை நோக்கி ராஜஸ்தான் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வைபவ் சூர்யவன்சி-ஜெய்ஸ்வால் இறங்கினர். வைபவ் அரோராவின் முதல் ஓவரில் ஒரு பவுண்டரி அடித்த சூர்யவன்சி, ரகானேவிடம் கேட்ச் கொடுத்து அதிர்ச்சியளித்தார். அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால், ராஜஸ்தான் திணறியது.

ராத்தோர்-5, ஜெய்ஸ்வால்-21, துருவ்ஜூரல்-0, ஹசரங்கா-2 ரன் என அடுத்தடுத்து வெளியேறினர். கேப்டன் ரியான் பராக்-ஹெட்மயர் வெற்றிக்காக போராடினர். மொயின்அலியின் 13வது ஓவரில் 5 சிக்சர்களை பறக்க விட்ட ரியான் பராக், ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஹெட்மயர் 29 ரன்னில் வெளியேற, அடுத்து இம்பேக்ட் பிளேயராக வந்த ஷூபம்துபே வந்தார். அதிரடியாக ஆடிய கேப்டன் பராக், 95 ரன்னில் (45 பந்து, 6 பவுண்டரி, 8 சிக்சர்) ஹர்சித் ராணா பந்தில் அவுட்டானார். அரோரா வீசிய த்ரிலிங்கான கடைசி ஓவரில் 22 ரன் தேவைப்பட்ட நிலையில், ராஜஸ்தான் 21 ரன் எடுத்தது. கடைசி பந்தில் ஆர்ச்சர் 12 ரன்னில் ரன்அவுட்டாகினார். இதனால், ராஜஸ்தான் அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஷூபம்துபே 25 ரன்னில் களத்தில் இருந்தார். கொல்கத்தா தரப்பில் மொயின்அலி, ஹர்சித்ராணா, வருண்சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டும், அரோரா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்கிறது.

 

The post 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி; ராஜஸ்தானை வீழ்த்தி பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்கும் கொல்கத்தா: ரியான் பராக் அதிரடி ஆட்டம் வீண் appeared first on Dinakaran.

Tags : Kolkata ,Rajasthan ,Ryan Barak ,IPL T20 ,KOLKATA NIGHT ,RAJASTHAN ROYALS ,EDINGORDON STADIUM ,Dinakaran ,
× RELATED இந்த ஆண்டில் ‘கூகுளில்’ அதிகம்...