×

2019ல் மோடி அரசு நடத்திய ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ ஆதாரங்கள் எங்கே? காங். மாஜி முதல்வர் கேள்வியால் சர்ச்சை

புதுடெல்லி: 2019ல் ஒன்றிய பாஜ அரசு நடத்திய ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’-க்கு ஆதாரங்கள் வேண்டும் என்று கேட்ட காங்கிரஸ் மாஜி முதல்வர், பெரும் சலசலப்பு ஏற்பட்டதால் பல்டி அடித்தார். காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடந்தது. பின்னர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பஞ்சாப் முன்னாள் முதலமைச்சருமான சரண்ஜித் சிங் சன்னி அளித்த பேட்டியில், ‘கடந்த 2019 புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தானில் நடத்திய ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ குறித்த ஆதாரங்களை வெளியிட வேண்டும்.

சர்ஜிக்கல் ஸ்டிரைக் எங்கு நடந்தது? அந்த தாக்குதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர்? பாகிஸ்தான் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் சர்ஜிக்கில் ஸ்டிரைக், அந்நாட்டின் எந்த பகுதியில் நடந்தது? இது எதுவும் எனக்கு தெரியவில்லை. நம் நாட்டில் யாராவது குண்டு வீசினால் நம் நாட்டு மக்களுக்கு தெரியாதா? அவர்கள் (ஒன்றிய பாஜக அரசு) பாகிஸ்தானில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதாகக் கூறுகிறார்கள்; ஆனால் எதுவும் நடக்கவில்லை. எங்கும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதாக தெரியவில்லை.

இதுகுறித்த ஆதாரத்தை ஆரம்பத்தில் இருந்தே நான் கேட்டு வருகிறேன்’ என்றார். இந்திய விமானப்படைக்கு எதிராக சரண்ஜித் சிங் சன்னி எழுப்பியுள்ள கேள்வி, அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர் மீண்டும் அளித்த பேட்டியில், ‘நான் சர்ஜிக்கல் ஸ்டிரைக்குக்கு ஆதாரம் கேட்கவில்லை. பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில், ஒன்றிய அரசுடன் காங்கிரஸ் உறுதியாக நிற்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராக எந்த நடவடிக்கையை எடுத்தாலும் பாறைபோல் காங்கிரஸ் ஆதரவாக இருக்கும்’ என்று பல்டி அடித்தார்.

* காங். செயற்குழு அல்ல பாகிஸ்தான் செயற்குழு
பாஜ தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா, ‘காங்கிரஸ் கட்சியின் தீர்மானங்கள் ஒரு குரலிலும், அதன் பல தலைவர்கள் மற்றொரு குரலில் பேசுவதும் காங்கிரஸ் கட்சியின் வழக்கமாகிவிட்டது. காங்கிரஸ் கட்சியானது இந்தியாவின் நலன்களுக்கு எதிராக அறிக்கைகளை வெளியிடும் பாகிஸ்தான் சார்பு தலைவர்களால் நிறைந்துள்ளது. காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திற்கு பின், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சரண்ஜித் சன்னி செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.

அதில் 2019ம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாலகோட்டில் இந்தியா நடத்திய விமானத் தாக்குதலின் உண்மைத்தன்மையை அவர் கேள்வி எழுப்புகிறார். பிரதமர் மோடியை அவமதிக்கிறார். பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவிரவாதிகளுக்கு ஆக்சிஜன் வழங்கவும், அவர்களின் மன உறுதியை அதிகரிப்பதற்குமான எந்த வாய்ப்பையும் காங்கிரஸ் விட்டுவிடாது. உள்ளே காங்கிரஸ் செயற்குழு நடக்கிறது. ஆனால் வெளியே பாகிஸ்தான் செயற்குழுவை போன்று நடந்து கொள்கின்றது’ என்றார்.

The post 2019ல் மோடி அரசு நடத்திய ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ ஆதாரங்கள் எங்கே? காங். மாஜி முதல்வர் கேள்வியால் சர்ச்சை appeared first on Dinakaran.

Tags : Modi government ,Chief Minister ,New Delhi ,Chief Minister of Congress ,Union BJP government ,Congress party ,executive ,committee ,Mallikarjun Kharge… ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புடன்...