×

பஹல்காம் தாக்குதலை கண்டித்து பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க வேண்டிய நேரம்: காங்கிரஸ் செயற்குழு தீர்மானம்

புதுடெல்லி: காங்கிரஸ் செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று கட்சி தலைவர் கார்கே தலைமையில் கூடியது. இந்த கூட்டத்தில் சோனியா, ராகுல், பிரியங்கா, பொதுச்செயலாளர்கள் ஜெய்ராம் ரமேஷ், கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பஹல்காம் தாக்குதலை கண்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு உரிய தண்டனை வழங்க ஒன்றிய அரசு உறுதியுடன் செயல்பட வேண்டும்.

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டவும், பயங்கரவாதத்தை தடுக்கவும் நமது கூட்டு விருப்பத்தை வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது. நமது எல்லைக்குள் பயங்கரவாதத்தை தூண்டிவிடும் பாகிஸ்தானை தனிமைப்படுத்தவும் தண்டிக்கவுமான உறுதியான, தெளிவான நடவடிக்கைகள் அடிப்படையில் சர்வதேச ஒருங்கிணைப்புடன் ஒன்றிய அரசு செயல்பட வேண்டும். கட்சி வேறுபாடுகளை கடந்து, இந்தியா ஒன்றாக நிற்கிறது என்ற தெளிவான செய்தியை அனுப்ப வேண்டும்.

முந்த நேரம் அரசியலுக்கான நேரம் அல்ல, மாறாக ஒற்றுமை, வலிமை மற்றும் தேசிய உறுதியைக் கோரும் தருணம் என்று காங்கிரஸ் நம்புகிறது. பஹல்காம் தாக்குதலில் பலியான குடும்பங்களுக்கு இழப்பீடு மட்டும் போதாது. நீண்டகால மறுவாழ்வு, மனநல ஆதரவு, தேசிய அங்கீகாரம், இழந்தவர்களை கவுரவித்தல் அவசியம். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த 26 குடும்பங்களுடன் காங்கிரஸ் நிற்கிறது. இந்த குடும்பங்களின் வலி முழு தேசத்தின் வலி.

அனைத்து குடிமக் களும் ஒற்றுமையாக, அமைதியாக, உறுதியுடன் இருக்குமாறு காங்கிரஸ் செயற்குழு வலியுறுத்துகிறது.  இந்த பயங்கரவாதச் செயலுக்கு நமது பதில் நமது ஜனநாயகத்தின் வலிமை, ஒற்றுமையின் ஆழம் மற்றும் நமது குடியரசின் மீள்தன்மை ஆகியவை பிரதிபலிக்கட்டும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பேசிய கார்கே, பஹல்காம் படுகொலையால் எழுந்துள்ள சூழ்நிலையை சமாளிக்க அரசாங்கம் தெளிவான உத்தி எதையும் முன்வைக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.

* பாதுகாப்பு, உளவுத்துறையில் கடுமையான குளறுபடி
காங்கிரஸ் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்,’ பஹல்காமில் நடந்த கோழைத்தனமான தாக்குதலின் சூத்திரதாரிகளும் குற்றவாளிகளும் தங்கள் செயல்களுக்கான முழு விளைவுகளையும் சந்திக்க வேண்டும். நாட்டின் மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியில் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையில் ஏற்பட்ட கடுமையான குறைபாடுகளுக்கு உரிய காலக்கெடுவுக்குட்பட்டு பொறுப்புக்கூறல் வேண்டும். ஏனெனில் இந்த தாக்குதல் எப்படி நடந்தது என்பதை பற்றி அறிய இந்திய மக்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கு தகுதியானவர்கள்’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

The post பஹல்காம் தாக்குதலை கண்டித்து பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க வேண்டிய நேரம்: காங்கிரஸ் செயற்குழு தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Pahalgam ,Congress Working Committee ,New Delhi ,Congress ,Working ,Committee ,Delhi ,president ,Kharge ,Sonia ,Rahul ,Priyanka ,Jairam Ramesh ,K.C. Venugopal ,Pakistan ,Dinakaran ,
× RELATED புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான...