×

புதிய கல்விக் கொள்கை மூலம் மாணவர்களின் எதிர்கால கல்விக் கனவைக் காவுவாங்கத் துடிக்கும் மோடி: திமுக மாணவர் அணிச் செயலாளர் ராஜீவ்காந்தி கண்டனம்

சென்னை: புதிய கல்விக் கொள்கை மூலம் 3, 5, 8ம் வகுப்பு மாணவர்களின் எதிர்கால கல்விக் கனவை பிரதமர் மோடி காவுவாங்கத் துடிப்பதாக திமுக மாணவர் அணிச் செயலாளர் ராஜீவ்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

“சாதிய ஒடுக்குமுறைகள் புரையோடிப் போய் கிடக்கிற இந்தியாவில் பிறப்பின் அடிப்படையில்தான் ஒருவருக்கு கல்வி பெறும் உரிமை தீர்மானிக்கப்பட்டது. இந்தச் சூழலை எதிர்த்து தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற தலைவர்கள் நடத்திய நூற்றாண்டுகாலப் போராட்டத்துக்குப் பிறகுதான் இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு தெருவுக்கும். ஊர் மக்களுக்கும் கல்வி எனும் அடிப்படை உரிமை சாத்தியமாகியிருக்கிறது.

அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்றிய பா.ஜ.க அரசு புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் 3, 5 மற்றும் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்றால்தான் மேல்படிப்புக்குச் செல்ல முடியும் என அறிவித்ததோடு அதற்குச் சம்மதிப்பதாகப் பெற்றோர்களிடம் கட்டாயக் கையெழுத்து வாங்கும் அடாவடியிலும் இறங்கியிருக்கிறது.

3, 5, 8ஆம் வகுப்புகளில் தோல்வியைச் சந்திக்கும் மாணவர்களின் கல்விக் கனவே சிதைந்து, அப்பா, தாத்தா பார்த்த குலத் தொழில் நோக்கித் தள்ளப்படும் படுபாதகம் இந்த அறிவிப்பின்மூலம் நிச்சயம் அரங்கேறும். அதுதான் ஒன்றிய அரசின் நோக்கமாகவும் இருக்கிறது. இங்கிருக்கும் எளிய மக்களின் குழந்தைகள் கலை, பொறியியல், மருத்துவம் என உயர்கல்வி படிக்க வேண்டுமானால் அதற்கு நுழைவுத் தேர்வைக் கட்டாயமாக்கி, அதிலும் சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தை முதன்மையாக்கியதோடு மட்டுமல்லாமல் தற்போது அந்த சி.பி.எஸ்.சி பாடத்தையும் எட்டாக் கனியாக்கும் கயமைத் தனத்தைச் செய்துகொண்டிருக்கிறது மோடி அரசு.

தேசிய கல்விக் கொள்கை எனும் பெயரில் ஏழை எளிய மாணவர்களின் கல்விக் கனவைச் சிதைக்கும் அயோக்கியத்தனத்தில்தான் இவர்கள் வந்து நிற்பார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்ததால்தான் கழகத் தலைவர், முதலமைச்சர் அதைத் தொடக்கத்திலேயே கிள்ளி எறிய நினைத்து அதற்கு எதிராகச் சட்டப்போராட்டம் நடத்தி, பள்ளிக் குழந்தைகளின் எதிர்காலத்தைக் காக்கும் அரணாக இருக்கிறார். கழகத் தலைவர், தாயுமானவரின் குரல் நம் குழந்தைகளுக்கானது மட்டுமல்ல.

ஒட்டுமொத்த இந்திய தேசத்துக்குமானது. முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி நம் மாணவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும் ஒன்றிய அரசுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வழியில் நம் குழந்தைகளின் கல்வி உரிமையைப் பாதுகாக்க உறுதியேற்போம்.

3, 5, 8ஆம் வகுப்பு மாணவர்களின் உயர்கல்விக் கல்விக் கனவு பொதுத்தேர்வில் வெற்றிபெற்றால்தான் சாத்தியப்படும் எனும் மோடி அரசின் கயமைத்தனத்தை வன்மையாகக் கண்டிப்பதோடு புதிய கல்விக் கொள்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும் எச்சரிக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

The post புதிய கல்விக் கொள்கை மூலம் மாணவர்களின் எதிர்கால கல்விக் கனவைக் காவுவாங்கத் துடிக்கும் மோடி: திமுக மாணவர் அணிச் செயலாளர் ராஜீவ்காந்தி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Dimuka Student Team ,Rajeevkanti ,Chennai ,Rajiv Gandhi ,Dinakaran ,
× RELATED NDA கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தை சென்னையில் நடத்த திட்டம்