×

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிஐக்கு மாற்ற தேவையில்லை: ஐகோர்ட்டில் டிஜிபி அறிக்கை

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி பாஜ வழக்கறிஞர் மோகன்தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ஞானசேகரன் மீது இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் தமிழக டிஜிபி தரப்பில் 17 பக்க அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கடந்த 2013ம் ஆண்டு சாஸ்திரி நகர் பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி தங்க சங்கிலியை பறித்து, பொதுமக்கள் மீது சோடா பாட்டில்களை ஞானசேகரன் வீசி தாக்குதல் நடத்தியதாக வழக்கு, 2017ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பார்க்கிங் பகுதியில் நின்று, அங்கு வந்தவர்களை மிரட்டி செல்போன் பறித்ததாக ஒரு வழக்கு என ஞானசேகரன் மீது சென்னை, செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தமாக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதில், 5 வழக்குகளில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. 9 வழக்குகளில் நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது. மற்ற வழக்குகளில் காவல்துறை விசாரணையை முடித்து இறுதி விசாரணை அறிக்கைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு விசாரணை செய்து மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் மொத்தம் 18 சாட்சிகள் சேர்க்கப்பட்டு பாதிக்கப்பட்ட மாணவி உள்ளிட்ட 13 சாட்சிகளிடம் இதுவரை சென்னை மகிளா நீதிமன்றம் விசாரணை நடத்தியுள்ளது. ஞானசேகரன் மீதான அனைத்து வழக்குளிலும் காவல்துறை விசாரணையை நிறைவு செய்து இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய மனு தேவையற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிஐக்கு மாற்ற தேவையில்லை: ஐகோர்ட்டில் டிஜிபி அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Anna University ,CBI ,DGP ,Chennai ,BJP ,Mohandas ,Madras High Court ,Gnanasekaran ,High Court ,Dinakaran ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...