×

திமுக, அதிமுக கூட்டணி இடையே இரு துருவ போட்டியாக 2026 பேரவை தேர்தல் நடைபெறும்: தொல்.திருமாவளவன் பேட்டி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மக்கள் மன்றம் சார்பில், பாசிச பாஜகவை வீழ்த்துவோம், மாநில அதிகாரங்களை மீட்டெடுப்போம் என்ற பேரணி மற்றும் பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகில் நேற்று நடைபெற்றது. மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் மகேஷ் தலைமை தாங்கினார். மேகலா வரவேற்று பேசினார். பெரியார் சிந்தனையாளர் இயக்க நிர்வாகி புதுவை தீனா பேரணியை துவக்கி வைத்தார். விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வக்கீல் பிரிவு மாநில செயலாளர் பார்வேந்தன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், திராவிட விடுதலைக்கழக தலைவர் கொளத்தூர் மணி, திமுக மாணவரணி செயலாளர் இரா.ராஜீவ்காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். மா.கம்யூ. தொகுதி செயலாளர் கமலநாதன், மக்கள் மன்ற நிர்வாகி ஜெசி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி லாரன்ஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசினார். முன்னதாக திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் தலைமையில் கூடிய ஒன்றிய அமைச்சரவை வரக்கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதி வாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு முடிவெடுத்திருக்கிறது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்த கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்து வந்ததை நாடு அறியும். பீகார் சட்டசபை தேர்தலுக்கான பரப்புரை தீவிரமாக நடைபெற்று வரும் சூழ்நிலையில் ராகுல் காந்தி சாதிவாரி கணக்கெடுப்பை முன்னிறுத்தி பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். இத்தகைய நெருக்கடியான அரசியல் பரபரப்புக்கு இடையில் பீகார் தேர்தலுக்காக ஒன்றிய அமைச்சரவை முடிவை எடுத்திருக்கிறது.

பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான அவசர நிலைப்பாடாகதான் தெரிகிறது. கொரோனா ேநாய் இருந்த சூழலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தள்ளிப்போய்விட்டது. மறுபடியும் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து வெற்றிபெற்றால்தான் 2031ல் நடைபெற இருக்கிற மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதுதான் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியும். எந்த நம்பிக்கையின் அடிப்படையில் அறிவித்திருக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்காகதான் இந்த நிலைப்பாடு என்றாலும்கூட மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். எத்தனை முனை போட்டி நடந்தாலும் இருமுனை போட்டிதான் உண்மையான போட்டியாக இருக்க முடியும். தமிழ்நாட்டை பொறுத்த வரை திமுக-அதிமுக ஆகிய 2 கட்சிகளும் மக்கள் செல்வாக்கு பெற்றுள்ள கட்சிகள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அதிமுக தனது பலத்தை குறைத்து மதிப்பிடுவதாகதான் நான் பார்க்கிறேன். அதிமுக ஏற்கனவே பாஜகவோடு 2021ல் சேர்ந்து படிப்பினை பெற்று இருக்கிறது, மறுபடியும் அதே பிழையை செய்கிறது. அதிமுக தனித்து நின்றால்கூட வாக்கு குறையாது. அதிமுகவே உணராமல் இருக்கிறது என்பதுதான் குறிப்பிடத்தக்க ஒன்று. எத்தனை அணி உருவானால்கூட திமுக தலைமையிலான கூட்டணிக்கும் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கும்தான் இரு துருவ போட்டியாக 2026 சட்டப்பேரவை தேர்தல் இருக்கும். இவ்வாறு கூறியுள்ளார்.

The post திமுக, அதிமுக கூட்டணி இடையே இரு துருவ போட்டியாக 2026 பேரவை தேர்தல் நடைபெறும்: தொல்.திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : BIPOLAR ,DIMUKA ,ADAMUKA ,COUNCIL ELECTIONS ,MRS. ,Kanchipuram ,Kanchipuram People's Forum ,Kanchipuram Bus Station ,BJP ,Forum Coordinator ,Mahesh ,Megala ,Adimuka Alliance ,2026 council elections ,Thirumaalavan ,
× RELATED சொல்லிட்டாங்க…