×

பெரியபாளையம் அருகே சோழவரம் ஏரி கால்வாயை ஆக்கிரமித்த செடி கொடிகள்: அகற்றி தூர்வார கோரிக்கை

ஊத்துக்கோட்டை: தாமரைப்பாக்கத்திலிருந்து சோழவரம் ஏரிக்குச் செல்லும் கால்வாயில் மண்டி கிடக்கும் புதர்கள் மற்றும் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே, தாமரைப்பாக்கம் பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் தடுப்பணை கட்டப்பட்டது. மழை காலங்களில் பூண்டி ஏரி நிரம்பினால் அந்த தண்ணீர் திறக்கப்பட்டு தாமரைப்பாக்கம் அணைக்கட்டில் தேக்கி வைக்கப்படும்.

மீதமுள்ள உபரி நீர் அணைக்கட்டிலிருந்து வெளியேரி கடலுக்குச் செல்லும். மேலும், தேக்கி வைக்கப்படும் தண்ணீர் அங்குள்ள கால்வாய் வழியாக சோழவரம் ஏரிக்கு திறக்கப்பட்டு அங்கிருந்து புழல் ஏரிக்கு அனுப்பப்படும். பின்னர், அங்கிருந்து சென்னை மக்களுக்கு குடிநீர் தேவைக்காக விநியோகம் செய்யப்படும்.இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தாமரைப்பாக்கத்திலிருந்து சோழவரம் ஏரிக்குச் செல்லும் கால்வாயில் செடிகொடிகள் படர்ந்து, கால்வாய் முழுவதும் புதர்கள் மண்டிக் காணப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் கால்வாய் அருகே உள்ள வீடு, கடை, ஓட்டல்களிலிருந்து வெளியேறும் கழிவுநீரும் கால்வாயில் கலந்து தேங்கி நின்று கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுவது மட்டுமல்லாமல் குடிநீரும் மாசடைகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு, கால்வாயில் படர்ந்திருக்கும் புதர்களை அகற்றி, கால்வாயை தூர்வார வேண்டும்.

மேலும், கால்வாயில் கழிவுநீரை திறந்து விடும் வீடுகள் மற்றும் ஓட்டல்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்வாயை தூர்வாரினால் சோழவரம் ஏரிக்கு தண்ணீர் செல்லும்போது கால்வாயோரத்தில் உள்ள விவசாயிகள் நிலத்தடி நீர் உயர்ந்து பயனடைவர். எனவே, விரைந்து கால்வாயை தூர்வார வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பெரியபாளையம் அருகே சோழவரம் ஏரி கால்வாயை ஆக்கிரமித்த செடி கொடிகள்: அகற்றி தூர்வார கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chozhavaram Lake Canal ,Periyapaliam ,Pothukottai ,Lotus ,Lake Chozhavaram ,Kosastale ,Tamaripakkam ,
× RELATED கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்...